தமிழகம்

உயிர் காக்கும் தடுப்பூசி விநியோகத்தில்கூட மோடி அரசு பாரபட்சமா?- கே.எஸ்.அழகிரி கண்டனம்

செய்திப்பிரிவு

மக்கள் உயிரைக் காக்கும் தடுப்பூசி விநியோகத்தில்கூட அரசியல் ரீதியாக மோடி அரசு பாரபட்சம் காட்டுவது கடுமையான கண்டனத்திற்குரியது. கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இந்நிலையில், தமிழகத்திற்குத் தடுப்பூசி விநியோகம் செய்வதில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 985 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் இதுவரை 25.9 சதவிகிதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 5.2 சதவிகித மக்களுக்குத்தான் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

ஆனால், பாஜக ஆட்சி செய்கிற உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3 கோடியே 72 லட்சம் பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 2 கோடியே 39 லட்சம் பேருக்கும், குஜராத்தில் 2 கோடியே 79 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் விநியோகிக்கப்பட்டிருக்கிற கரோனா தடுப்பூசியை விடப் பலமடங்கு தடுப்பூசிகளை, பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு விநியோகம் செய்கிறது.

மக்கள் உயிரைக் காக்கும் தடுப்பூசி விநியோகத்தில் கூட அரசியல் ரீதியாக மோடி அரசு பாரபட்சம் காட்டுவது கடுமையான கண்டனத்திற்குரியது. கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது'' என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கான கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால், மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசிக்கான தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது எனக் குறிப்பிட்டு, தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யவும், தமிழ்நாட்டிற்கு மக்கள் தொகை அடிப்படையில் சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைத்திடவும், ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளித்திடக் கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (13-7-2021) கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT