தமிழகம்

பழநியில் விடுதியில் தங்கியிருந்த கேரள பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமையா?- திண்டுக்கல் எஸ்பி விசாரணையில் புதிய தகவல்கள்

பி.டி.ரவிச்சந்திரன்

கேரள பெண் பழநியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ரவளி பிரியா நேற்று நேரில் விசாரணை நடத்தினார். இதில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரள மாநிலம், கண்ணனூர் அருகே தலைச்சேரியைச் சேர்ந்த45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், உடல்நலக் குறைவு காரணமாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து விசாரித்துள்ளனர்.

அங்கு அவரது கணவரைத் தாக்கிய 3 பேர் தன்னைக் கடத்திச்சென்று ஒரு விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமைசெய்ததாகவும் அப்போது காயங்கள் ஏற்பட்டதாகவும் மருத்துவர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து பழநி போலீஸாரிடம் புகார் அளிக்கச் சென்றபோது புகாரை வாங்கமறுத்தனர். இதனால் ஊர் திரும்பிகண்ணனூர் அரசு மருத்துமனையில் சேர்ந்ததாக கூறினார்.

இதுகுறித்து மருத்துவர்கள் கண்ணனூர் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். பிற மாநிலத்தில் நடந்த நிகழ்வு என்பதால் கேரள மாநில டிஜிபிக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கேரள டிஜிபி அணில்காந்த், தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு பாதிக்கப்பட்ட கேரளபெண் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடிதம்எழுதினார். இதையடுத்தே பழநியில் கேரள பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரம் வெளியில் தெரிந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த திண்டுக்கல் எஸ்பி ரவளிபிரியாவுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். முதற்கட்டமாக, நேற்று முன்தினம் ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான போலீஸார், பழநியில், அந்தப் பெண் தங்கியதாகக் குறிப்பிட்டிருந்த விடுதியில் விசாரணை நடத்தினர். அப்போது கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

கோயிலே திறக்காத கோவிட் ஊரடங்கு நேரத்தில் கேரள பெண் தன்னைவிட வயது குறைந்த ஆண் ஒருவருடன், கடந்த ஜூன் 19-ம் தேதி கேரளாவில் இருந்து ரயில் மூலம் பழநி வந்தார். அப்போது அங்கு விடுதிகளும் திறக்கப்படவில்லை. சட்ட விரோதமாக அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து 2 நாட்கள் தங்கினார். அவர்கள் தாய், மகன் எனக் கூறி உள்ளனர். ஆனால், அவர்களது நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர்களை விடுதி ஊழியர்கள் வெளியேற்றினர்.

இந்நிலையில் அங்கிருந்த ரவுடி கும்பல் ஒன்று அப்பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட எஸ்பிரவளிபிரியா பழநியில் நேற்று நேரில் தீவிர விசாரணை நடத்தினார்.பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கேரள பெண் பழநியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 365 மற்றும் 376 டி (கடத்தல் மற்றும் கூட்டு வன்கொடுமை) சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் தலைமையில் குழு அமைத்து முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.சிசிடிவி காட்சிகள், செல்போன் உரையாடல்கள் மற்றும் சாட்சிகள் குறித்து விசாரணை நடத்த தனியாக 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனது நேரடி கண்காணிப்பில் இந்தக் குழுக்கள் செயல்படும். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமாகவும், நேர்மையாகவும் விசாரணை நடத்துகிறோம். கேரள போலீஸாருடன் இணைந்து முழுமையாக விசாரணை நடத்துவோம் என்றார்.

ஜூன் 19, 20-ம் தேதிகளில் ஊரடங்கால் கோயில்கள், விடுதிகள் திறக்கப்படாத நிலையில் விடுதியில் அவர்களுக்கு எப்படி அறை வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுந்துள்ளது.

பழநியில் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியா?

பழநியில் கேரள பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரசித்திபெற்ற ஆன்மிக தலமான பழநிக்கு பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் தனியார் காவலாளிகள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறது. கோயில் அடிவாரம் பகுதியில் காவல் நிலையம் உள்ளது. இந்நிலையில், பழநிக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு பழநியில் நடந்தது இல்லை என போலீஸார் தெரிவிக்கின்றனர். பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்க சிலர் வலம் வருவதாக கோயில் நிர்வாகம் அடிக்கடி எச்சரிக்கை அறிவிப்பு செய்கிறது.

பழநியில் உள்ள ஏராளமான விடுதிகளை முறைப்படுத்துவது, சட்டவிரோதமாக தங்குபவர்களைக் கண்காணிப்பது, நகரில் போலீஸாரின் ரோந்துப் பணிகளை அதிகரிப்பது, சமூக விரோதிகளை அடையாளம் கண்டு ஒடுக்குவதன் மூலமே இதுபோன்ற செயல்களை தடுக்க முடியும் என பக்தர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT