தமிழக அரசின் பாடநூல் கழகத் தலைவராக நேற்று பொறுப்பேற்ற ஐ.லியோனி. 
தமிழகம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கல்விப் பணிகள் பாட நூல்களில் சேர்க்கப்படும்: தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி தகவல்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி பொறுப்பேற்றுக் கொண்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணிகள், கல்விப் பணிகள் குறித்து பாடப் புத்தகங்களில் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக, பட்டிமன்றப் பேச்சாளரான திண்டுக்கல் ஐ.லியோனி சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள பாடநூல் கழக தலைமை அலுவலகத்தில் அவர் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டி.மணிகண்டன், உறுப்பினர் செயலர் நாகராஜ முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் லியோனி கூறியதாவது:

ஆசிரியர் பணியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற எனக்கு பாடநூல் கழகத்தில் ஒரு பெரிய பொறுப்பை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். மாணவர்களுக்கு மகிழ்ச்சியாக, எளிமையாக இருக்கும் வகையில் பாடப் புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்பது என் நோக்கம்.

மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வாழ்க்கை கல்வி, தேர்வுக்கு தயாராவது, திறன் வளர்ப்பு தொடர்பான பாடத் திட்டங்களும் பாடநூல் கழகம் சார்பில் உருவாக்கப்படும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் பாடநூல் கழகம் முயற்சி செய்யும்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணிகள், கல்விப் பணிகள் குறித்தும், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி பெற அவர் எடுத்த முயற்சிகள் குறித்தும் வருங்காலத் தலைமுறையினர் பாடநூல் வழியாக தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆட்சிக்காலத்தில் பாடநூல் கழக புத்தகங்களின் முதல் பக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர், அரசியல் காரணங்களால் நீக்கப்பட்டது. அவர் கல்விக்காக செய்த சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில், பாடப் புத்தகங்களில் அவரது பெயர் மீண்டும் சேர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT