பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் ஜூலை 7 முதல் 17-ம் தேதி வரை போராட்டங்கள் நடத்துமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாலாஜா சாலை, எல்லீஸ் சாலை சந்திப்பில் இருந்து, தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வரை நேற்று காலை சைக்கிள் பேரணி நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில் நடந்த இப்பேரணியை சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தொடங்கிவைத்தார். இதில், தேசிய செயலாளர் சி.டி.மெய்யப்பன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய கு.செல்வப்பெருந்தகை, ‘‘கரோனா பொது முடக்கத்தால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை வரலாறு காணாத அளவுக்கு மிக கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு மத்திய பாஜக அரசு விதித்துள்ள வரிகளே காரணம். மோடி அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தவே தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்’’ என்றார்.
சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், இருசக்கர வாகனங்களை கைகளால் தள்ளிக்கொண்டே சென்று புரசைவாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் பெட்ரோல், டீசல் போட கடன் கேட்டு கட்சியினர் நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி,பொன்னேரி, ஆவடி ஆகிய 5 இடங்களில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் ஜெயக்குமார் எம்.பி., பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், மாநில துணைத் தலைவர்கள் ரங்கபாஷ்யம், இமயா கக்கன், பொதுச் செயலர் அருள் அன்பரசு, மாவட்டத் தலைவர்கள் ஏ.ஜி.சிதம்பரம், ரமேஷ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
டிப்பர் லாரி உரிமையாளர்கள்
வண்டலூரில் தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர், லாரியை கயிறு கட்டி சாலையில் இழுத்துச் சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாநிலத் தலைவர் ஐ.கே.எஸ் நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, குரோம்பேட்டையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.