தமிழகம்

தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கல்: விசாரணையில் ‘க்யூ’ பிரிவு போலீஸ்

ஆர்.சிவா

தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்கள் பதுங்கியிருப்பதை ‘க்யூ' பிரிவு போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

மாவோயிஸ்டு கைது

தமிழகத்தில் நக்சலைட்களும், மாவோயிஸ்டுகளும் பதுங்கியிருப்பதாக ‘தி இந்து'வில் (தமிழ்) 2-01-2015 அன்று முதல் பக்கத்தில் செய்தி வெளியானது. அதை உறுதிசெய்யும் வகையில் மாவோயிஸ்ட் தீவிரவாதியான சுரேந்திர யாதவ்(34) என்பவரை சென்னை ‘க்யூ' பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் ஏற்கெனவே பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டுகள் உதவி செய்ததால்தான் சுரேந்திர யாதவ், இங்கு வந்து தங்கியிருக்கிறார். அவருக்கு உதவி செய்தவர்கள் யார் என்பது குறித்து இப்போது தீவிர விசாரணையில் போலீஸார் இறங்கியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வனப் பகுதியில் 2002-ம் ஆண்டு ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட 32 நக்சலைட்களில் 29 பேரை போலீஸார் கைது செய்தனர். சிவா என்கிற பார்த்திபன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாரதி, தசரதன் ஆகியோர் மட்டும் தப்பிச் சென்றனர். இருவரையும் தமிழக போலீஸால் இன்று வரை பிடிக்க முடியவில்லை. தசரதன் யார்? அவர் எப்படி இருப்பார்? என எந்த விவரங்களும் கிடைக்காத நிலையில் அவரைத் தேடும் பணியை நிறுத்திவிட்டனர். பாரதியை பிடிக்க பலமுறை முயன்றும் தோல்வியே மிஞ்சியது. ஆள்மாறாட்டத்தில் வேறொறு பாரதியை 3 முறை கைது செய்து விடுவித்தனர் போலீஸார்.

சென்னையில் பதுங்கல்

ஊத்தங்கரை ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளிவந்த பொடா பத்மா தலைமறைவானார். பெண் நக்சலைட்களான பாரதி, பத்மா ஆகியோர் சென்னையில் தலைமறைவாக இருக்கின்றனர் என்ற தகவல் கிடைக்க தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது. தென் மாநிலங்களில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவராக செயல்பட்ட விவேக்கை 2012-ம் ஆண்டு சென்னை ‘க்யூ' பிரிவு போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னரே, விவேக்கும், பத்மாவும் திருமணம் செய்து சென்னையில் ஒரு வீட்டில் வசித்தது தெரியவந்தது.

கணக்கெடுக்கும் பணி

க்யூ பிரிவு போலீஸ் அதிகாரி கூறும்போது, ‘‘வட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் நக்சலைட்கள் இப்போது தமிழகத் திலும் வளர்ந்திருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இவர்களை முளையிலேயே கிள்ளி எறிய தீவிர தேடுதல் வேட்டை மற்றும் ரகசிய விசாரணையில் ஈடுபட் டுள்ளோம். தமிழகத்தில் தருமபுரி, தேனி மாவட்ட காட்டுப் பகுதிகளில் இருந்த நக்சலைட்கள் இப்போது சென்னையில் ஊடுருவி, தங்கள் அமைப்பின் வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றனர். நக்சல்களுக்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை சேகரிப்பதையும் தொடங்கியுள்ளனர். நக்சல்கள் சந்திக்கும் இடமாகவும் சென்னையை பயன்படுத்தி வருகின்றனர்.

நக்சல், மாவோயிஸ்ட்களை கட்டுப் படுத்த வட மாநிலங்களில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதால் அவர்கள் தலைமறைவாக இருப்பதற்கு தமிழகத்தை தேர்ந்தெடுக்கின்றனர். தமிழகத்தில் நக்சல்கள் வளர்வதற்கு இதுவே முதல் காரணம். இதைக் கட்டுப்படுத்த, வெளி மாநிலத்தவர்களை கணக்கெடுக்கும் பணியை மீண்டும் தொடங்கி, தீவிரமாக கண்காணிக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT