திருச்சி மாநகரில் 495 இடங்களில் வேகத்தடைகள் உள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை உரிய விதிமுறைகளின்படி அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாகவும், எனவே, ஐஆர்சி விதிகளின்படி அவற்றை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
167.23 சதுர கி.மீ பரப்பளவில் 65 வார்டுகளைக் கொண்டுள்ள திருச்சி மாநகருக்குள் 35 கி.மீ.க்கு தேசிய நெடுஞ்சாலை, 21.60 கி.மீ.க்கு மாநில நெடுஞ்சாலை, 61 கி.மீ.க்கு மாவட்ட சாலைகள், சுமார் 800 கி.மீ.க்கு மாநகராட்சி மூலம் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர சிமென்ட் சாலை, பேவர் பிளாக் சாலை உட்பட மாநகர எல்லைக்குள் மொத்தம் 1,411.97 கி.மீ நீளத்துக்கு சாலைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மாநகரில் வேகக் கட்டுப்பாடு
வாகனப் பெருக்கத்துக்கேற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாததால் இச்சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத்தவிர்க்க மாநகரில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 30 கி.மீ வேகத்திலும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 40 கி.மீ வேகத்திலும் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என வேகக் கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர விபத்து அபாயமான பகுதிகள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், குறுகலான மற்றும் வளைவுடன்கூடிய சாலைகளில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனுமதியின்றி வேகத்தடைகள்
இதன்படி மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளில் ரங்கம் கோட்டத்தில் 67, அரியமங்கலம் கோட்டத்தில் 250, பொன்மலைக் கோட்டத்தில் 31, கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் 147 என 495 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், பல இடங்களில் உரிய அனுமதியின்றி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இந்திய சாலை காங்கிரஸ் (ஐ.ஆர்.சி) வகுத்துள்ள விதியின்படி அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
காயம், பொருளாதார இழப்பு
சாலைப் பணிகளின்போது ஒப்பந்ததாரர்கள் தங்களது விருப்பம்போல அதிக உயரம் மற்றும் அகலத்துடன் வேகத்தடை அமைத்து விடுகின்றனர். அவற்றின் மீது எவ்வித எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.
இதனால் வேகத்தடைகளின் மீது பயணிக்கும்போது, திடீரென தாவிக் குதித்து வாகனங்கள் கீழே விழுவதால் வாகன ஓட்டிகளுக்கு காயம் ஏற்படுகிறது. சில சமயங்களில் உயிரிழப்பும் நேரிடுகிறது. இதுதவிர முறையற்ற வேகத்தடைகளில் ஏறி, இறங்கும்போது கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் முன், பின் பகுதிகளும் சேதமடைந்து பொருளாதார ரீதியாக இழப்பை ஏற்படுத்துகின்றன.
விபத்துக்கு வழிவகுக்கும்
இதுகுறித்து சாலை பயனீட்டாளர் நலக்குழு ஒருங்கிணைப்பாளரான அல்லூர் அய்யாரப்பன் கூறும்போது, ‘‘சாதாரண வாகன போக்குவரத்துள்ள சாலைகளில் 3.7 மீ அகலம், 10 செ.மீ உயரத்துக்கு வேகத்தடை அமைக்க வேண்டும். ஆனால், திருச்சி மாநகரில் பெரும்பாலான வேகத்தடைகள் விதிகளை மீறியே அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, ஐ.ஆர்.சி விதிகளுக்கு உட்பட்டு வேகத்தடைகளை அமைப்பதுடன், அவற்றின் மீது பளிச்சென தெரியும் வகையிலான வண்ணம் பூச வேண்டும். பிரதிபலிப்பான்கள் பொருத்த வேண்டும். வேகத்தடையில் இருந்து சுமார் 40 மீட்டருக்கு முன்பாக எச்சரிக்கைப் பலகை வைக்க வேண்டும்’’ என்றார்.
விரைவில் நடவடிக்கை உறுதி
இதுகுறித்து மாநகர போக்குவரத்து மற்றும் ஒழுங்கு பிரிவு காவல் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘முறையற்ற வேகத்தடைகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மாவட்ட சாலை பாதுகாப்புக் குழுவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். மாநகராட்சி நிர்வாகத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். விரைவில் சீரமைக்க வலியுறுத்துவோம்’’ என்றனர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எங்கெங்கு வேகத்தடைகள் உள்ளன என்பது குறித்து தற்போது கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதில் பெரும்பாலானவை ஐ.ஆர்.சி விதியின்படி அமைக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம். வேகத்தடைகளை முறைப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும்’’ என்றனர்.