அமராவதி பிரதான வாய்க்கால் பல ஆண்டுகளாகவே பராமரிக்கப்படாமல், குப்பைகள் தேங்கிப் பாழடைந்துள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டுசெல்லும் பிரதான வாய்க்கால் 25 கி.மீ. நீளமுடையது.
இந்த வாய்க்காலில் முறையாக நடைபெற வேண்டிய பராமரிப்புப் பணிகள் பல ஆண்டுகளாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதனால் வாய்க்காலின் உட்பகுதி மணல் மேடுகளாகவும், தண்ணீரில் அடித்து மரக்கிளைகள் குவிந்தும், புதராகச் செடிகள் முளைத்தும் காணப்படுகின்றன. பொதுமக்களால் வீசி எறியப்படும் துணிகள், பயன்படுத்தப்பட்ட லாரி டயர்கள், மது பாட்டில்கள் எனக் குப்பை மேடாகக் காட்சியளிக்கின்றன.
அமராவதி அணையில் தொடங்கி முதல் 10 கி.மீ. வரையான பகுதியிலேயே இதுபோன்ற அவலத்தைக் காணமுடிகிறது. இவை மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த தொலைவில் பல்வேறு ஊர்களில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பயணிக்கும் வாய்க்காலின் நிலை இன்னும் மோசமாக இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்துப் பாசன விவசாயிகள் கூறும்போது, ''நீர்நிலைப் பராமரிப்பில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என நீதிமன்றத் தீர்ப்புகள் சுட்டிக்காட்டியும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கின் காரணமாகவே இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.
இதுபற்றி அமராவதி அணை உதவி செயற்பொறியாளர் சரவணன் (பொ) கூறும்போது, ''பிரதான வாய்க்கால் பராமரிப்புக்கு அரசிடம் நிதி ஒதுக்கக் கோரி பலமுறை கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.