கிராமப்புறங்களை மேம்படுத்த அரசுப் பள்ளி மாணவி ஒருவர் ஆய்வுத் திட்டம் தயாரித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ளார். அதற்கு உரிய பதில் இல்லாததால், இத்திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடுமாறு அந்த மாணவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் கழியராயன் விடுதியைச் (கல்விராயன் விடுதி) சேர்ந்தவர் லட்சுமணன், விவசாயி. இவரது மகள் கவுரி(16). இவர், 10-ம் வகுப்பு வரை உள்ளூரில் படித்த நிலையில், தற்போது தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
8-ம் வகுப்பு படித்தபோது, ஆசிரியர் அறிவுறுத்தலின்பேரில் கவுரி உருவாக்கிய தனது ஊரைப் பற்றிய மாதிரி வடிவமைப்பு அனைவராலும் ஈர்க்கப்பட்டது. அத்துடன் விட்டுவிடாமல், உள்ளூரில் கள ஆய்வு நடத்தி, வட்டாட்சியர், கோட்டாட்சியர், ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்குச் சென்று, தனது ஆய்வை படிப்படியாக மேம்படுத்தி, தேசிய கிராமப்புற மேம்பாட்டு ஆய்வுத் திட்டம் எனும் திட்டத்தை வடிவமைத்தார்.
இந்த ஆய்வு திட்டத்தை செயல்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கையாக அனுப்பிய நிலையில், எந்த பதிலும் இல்லாததால், 'எனது திட்டத்தை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கவுரி தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இதுகுறித்து 'இந்து தமிழ்' நாளிதழிடம் மாணவி கவுரி கூறியது: எங்களது வீட்டுக்கு அருகே, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உட்பட்டுள்ள கச்சமடி ஏரியின் கரையை அரசு அனுமதியுடன் எனது தந்தை சொந்த செலவில் சீரமைத்தார். அதன்பிறகு, ஆக்கிரமிப்புகளை அகற்றித் தருமாறு கோரியதற்கு, யார் நிர்வாகத்தின் கீழ் சம்பந்தப்பட்ட ஏரி வருகிறதென்றே தெரியவில்லை என தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை, நீர்வள ஆதாரத் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் எழுத்துப்பூர்வமாகவே பதிலளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல, அரசின் ஒவ்வொரு வேலைக்கும் உள்ளூரில் தொடங்கி ஆட்சியர் அலுவலகம் வரை மக்கள் அலைந்து திரிவதையும், அரசிடம் இருந்து முறையான பதில் வராததால் மக்கள் விரக்தி அடைவதையும் ஆய்வுக்கு உட்படுத்தினேன். ஆட்சியர் அலுவலகங்களில் அளிக்கப்படும் மேல்முறையீடு மனுக்களைக் கூட உள்ளூர் அலுவலரே விசாரிப்பதை முரணாக கருதினேன்.
இத்தகைய நிர்வாக சிக்கலை தீர்த்தல், உள்ளூரை வளமைப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களுடன் 'கிராமத்தை கட்டமைத்து மேம்படுத்தினால் நாடு மேம்படும்' என்ற அடிப்படையில், உரிய ஆதாரங்களுடன் தேசிய கிராமப்புற மேம்பாட்டு ஆய்வுத் திட்டத்தை உருவாக்கினேன். இத்திட்டத்தை செயல்படுத்துமாறு குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், தமிழக முதல்வர் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்களுக்கு அனுப்பி உள்ளேன். ஆனால், இதுவரை பதில் வரவில்லை.
எனவே, ஒவ்வொரு கிராமத்திலும் சர்வ அதிகாரம் படைத்த கிராம ஆட்சியரை நியமித்து, மேல்முறையீடு உட்பட அனைத்து மனுக்
களையும் அவர் வாயிலாகவே பிற துறைகளுக்கு அனுப்ப வேண்டும். அவரே கோரிக்கையை நிறைவேற்றித் தருவதுடன், உரிய பதிலையும் பெற்றுத் தர வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள எனது திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்வராததால் நீதிமன்றத்தை நாடியுள்ளேன். அதன் மூலம் என் கோரிக்கை நிறைவேறும் என்று நம்புகிறேன். இல்லையெனினும், தற்போதிலிருந்தே போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகிறேன். குடிமைப்பணித் தேர்வு மூலம் வெற்றி பெற்று, நானும் ஐஏஎஸ் அதிகாரியாகி, இந்தத் திட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவேன் என்கிறார் நம்பிக்கையுடன்.