தமிழகம்

வீட்டில் கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் உயிரிழப்பு: செவிலியர் கைது

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(30). கூலித் தொழிலாளியான இவர் திருமணமானவர். இவருக்கு, 27 வயது பெண் ஒருவருடன் நட்பு இருந்துள்ளது. இந்நிலையில், அந்தப் பெண் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி(41) என்பவரை கருக்கலைப்பு செய்வதற்காக அந்தப் பெண் அணுகியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஆண்டிமடம் அருகே அன்னங்காரங்குப்பம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில், அப் பெண்ணுக்கு கிருஷ்ணவேணி நேற்று முன்தினம் கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. கருக்கலைப்பு செய்த சிறிதுநேரத்தில், அந்தப் பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகமானதால், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த ஆண்டிமடம் போலீஸார் செவிலியர் கிருஷ்ணவேணியை கைது செய்தனர். வசந்தகுமாரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT