தமிழகம்

மாற்றுக் கட்சியினருக்கு திமுகவில் சிவப்பு கம்பள வரவேற்பு: சமூக வலைதளங்களில் குமுறும் தொண்டர்கள்

கி.மகாராஜன்

அதிமுக, அமமுக உட்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பலர்திமுகவில் சேர்ந்து வரும் நிலையில், ‘மாற்றுக் கட்சியினரை உபசரிங்க, கவனிங்க, ஆனால் வாரிவழங்கி விடாதீர்கள், உண்மைத் தொண்டர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விடுங்க தலைவா’ என சமூக வலைதளங்களில் திமுகவினர் தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. இதையடுத்து அதிமுக, அமமுக, பாமக, மநீம உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பலர் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்து வருகின்றனர்.

சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பே அமமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த செந்தில்பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன், கலைராஜன், பாஜகவில் இருந்து வந்த பி.டி.அரசகுமார் ஆகியோருக்கு உடனடியாக கட்சிப் பதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சிக்கு வந்ததும் செந்தில்பாலாஜி அமைச்சராக்கப்பட்டு முக்கியத் துறைகள் வழங்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் பழனியப்பன், நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் திமுகவில் சேர்ந்தனர்.

மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு திமுகவில் முக்கியத்துவம் அளிப்பது, உடனடியாக பதவி வழங்குவது காலம் காலமாக நடந்து வருவது அக்கட்சித் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிருப்தியை தலைமையிடம் நேரில் சொல்லத் தயங்கும் கட்சியினர் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு அக்கட்சியினர் ஆர்வத்துடன் லைக் அளிப்பதுடன் தங்கள் சமூக வலைதளங்களிலும் பகிர்கின்றனர்.

மதுரை கிழக்கு ஒன்றிய மாணவர் அணிச் செயலர் துரை.விக்னேஷ்வரன் தனது முகநூல் பக்கத்தில், ‘நீங்க சேருங்க.. எவ்வளவு நபரைவேண்டுமானாலும் சேர்த்துக்கோங்க தலைவரே, கடந்த 2 மாத காலமாக மாற்றுக் கட்சியில் இருந்து பலர் இணைகிறார்கள். இதனால் கழகத்துக்கு பலமும், நலமும்கூடுகிறது. மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அதே சமயம் 6 மணி நேரம் தூக்கத்தை மட்டும் ஒதுக்கிவிட்டு, கழகத்துக்காக கடந்த 10 ஆண்டுகளாக முகநூலிலும், களத்திலும் அரும்பாடுபட்ட அடிமட்டத் தொண்டனை கை விட்டுறாதீங்க.. ஏனெனில் உங்களை நம்பியோர் பலர் இருக்கின்றனர்.

அறிவுரை சொல்ல அரசியல் அனுபவமோ, முதிர்ச்சியோ எனக்குக் கிடையாது. இருந்தாலும் அடிமட்டத் தொண்டனாக சொல்லக்கடமைப்பட்டுள்ளோம். காலம் காலமாக இருவண்ணக் கழக வேட்டிஅணிந்தவர்கள் பலர் வெளியில்சொல்ல முடியாமல் புழுங்குகின்றனர் ’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

உதயசூரியன் என்பவரின் முகநூல் பதிவில், ‘தலைமைக்கு கருத்து சொல்லும் அளவுக்கெல்லாம் எமக்கு அரசியல் முதிர்ச்சி, அனுபவம் கிடையாது. ஆனாலும் மனது முழுவதும் ஒரு சில காயங்கள் ஆறாமல் இருக்கிறது, அதை சரி செய்ய வேண்டும் என்பதால்தான் இந்தப் பதிவு. மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களை நாம் மனதார வரவேற்கிறோம் அதில் மாற்றுக் கருத்து இல்லை.

இன்று இவர்கள் வந்திருப்பது முழுக்க முழுக்க நாம் ஆட்சியில் இருக்கிறோம் எனும் ஒற்றை காரணம்தானே, தவிர வேறு எதுவும்இல்லை. ஆனால் பிறந்ததிலிருந்து திமுக, தாத்தா காலத்தில் இருந்துதிமுக என்று இருப்பவர்களை அரவணைத்து செல்லாத மாவட்ட செயலாளர்களையோ, தோல்வியடைந்த இடங்களில் தோல்விக்குகாரணமானவர்களையோ கேள்விகேட்காமல், கோஷ்டிப் பூசலை சரிசெய்யாமல், மாற்றுக் கட்சியினரை இழுத்துப் பிடிப்பதெல்லாம் தேவையில்லாத வேலை.

தளபதியோடு (மு.க.ஸ்டாலின்) ஒரேயொரு புகைப்படம் எடுத்தால் வாழ்நாள் முழுவதும் போதுமென எங்கேயோ கிராமத்தில் ஒரு கழகக்காரர் இருப்பார், அவர் சிந்தனை முழுவதும் கழகமாகவே இருக்கும், அவர்களை தூக்கிப் பிடியுங்கள் ’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சத்தியராஜ் என்பவர் தனது பதிவில், அதிமுக முன்னாள் எம்.பி., முன்னாள் அமைச்சர், மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர், பாமக மாநில நிர்வாகிகள், அமமுக,நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் வந்து சேர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இவர்கள் அனைவரும் திமுக வென்றுவிடக் கூடாது என்று தெருத் தெருவாக அலைந்து திரிந்தவர்கள், இவர்களால்தான் நம் மாபெரும் வெற்றி தடுக்கப்பட்டது. இவர்களை உபசரிங்க, கவனிங்க, ஆனால் வாரி வழங்கி விடாதீர்கள், என்றும் கழகத்துக்கு, கொள்கைக்கு தோள் கொடுக்கும் உண்மைத் தொண்டனுக்கு தோள் கொடுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மாற்றுக் கட்சியினருக்கு திமுகவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதை விரும்பாத திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தவாறு உள்ளனர்.

          
SCROLL FOR NEXT