விடுமுறை தினமான கடந்த இரு நாட்களாக ஏற்காட்டுக்கு வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பயணிகள் வருகை அதிகரித்துள் ளது. அதேநேரம் முகக் கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு மலை அடிவாரத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மே மாத பிற்பகுதியில் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்காட்டுக்கு பயணிகள் வந்து செல்ல இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டிருந்தது. தற்போது, இ-பாஸ் நடைமுறையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இருப்பினும் ஏற்காட்டில் உள்ள தோட்டக் கலைத்துறை பூங்காக்கள், படகு இல்லம், வனத்துறையின் சூழல் சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. தங்கும் விடுதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்காட்டில் தற்போது நிலவும் குளுகுளு சீதோஷ்ண நிலையை ரசிக்க வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பயணிகள் வருகை விடு முறை நாட்களான கடந்த இரு நாட்களாக அதிகரித்து இருந்தது. இந்நிலையில், முகக் கவசம் அணியாமல் ஏற்காடு வரும் பயணி களுக்கு மலை அடிவாரத்தில் போலீஸ் உதவியுடன் வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் கரோனா பரிசோதனை செய்த பின்னரே ஏற்காட்டுக்கு செல்ல அனுமதி அளிக்கின்றனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறியதாவது:
முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது முதல் தற்போது வரை ஏற்காடு வருபவர்களுக்கு கரோனாபரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. இ-பாஸ் நடைமுறைநீக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
முகக் கவசம் அணியாமல் வரும் அனைத்து பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப் படுவதோடு, அபராதமும் விதிக்கப் படுகிறது. முகக் கவசம் அணிந்து வரும் பயணிகளின் விருப்பம் தெரிவித்தால் பரிசோதனை செய்யப் படுகிறது.
நேற்று முன்தினம் (10-ம் தேதி) 106 பேருக்கும், நேற்று (11-ம் தேதி) 116 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள், அந்தந்த மாநில, மாவட்ட நிர்வாகங்ளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனிடையே பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏற்காடு வீதிகளில் கூட்டம் அதிகரித்து வாகன நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் மற்றும் சுகாதாரத்துறை யினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து கரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற விழிப்புணர்வு செய்தனர். கடந்த இரு நாட்களில் 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் ஏற்காடு வந்து சென்றுள்ளனர்.