போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்வதைத் தடுக்க, கோயில் நிலங்களை ‘டி’ என்று குறிப்பிட திட்டமிடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நில நிர்வாக ஆணையர் நாகராஜனுக்கு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்கள், வருவாய் துறையின் ‘தமிழ் நிலம்’ மென்பொருள் பதிவுகளோடு ஒப்பிடப்பட்டு, 3 இனங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முழுமையாக பொருந்துவது, பகுதியாக பொருந்துவது, புதிய இனங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் முழுமையாக பொருந்தும் இனங்கள் அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பகுதியாக பொருந்தும் இனங்களை பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. அதுதொடர்பான பணிகளில் அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தவிர, ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை திட்டம் மற்றும் மென்பொருள் 2.0 இணையதளத்தை இணைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், வில்லங்க சான்றை பார்த்து ஆய்வு செய்து கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதற்கான இணைப்பு பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் இது அமலுக்கு வரும். மேலும், ‘தமிழ் நிலம்’ பதிவுகளோடு முழுவதுமாக பொருந்தும் இனங்களை ‘டி’ என்று குறிப்பிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், போலி ஆவணங்களை பயன்படுத்தி, கோயில் நிலங்களை முறைகேடாக பத்திரப் பதிவு செய்வது தடுக்கப்படும். எனவே, இவ்வாறு குறிப்பிடுவது தொடர்பாக தேசிய தகவல் மைய அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.