சென்னை பெருங்குடி ஜெம் மருத்துவமனையில் ஜெம் லேப்ராஸ்கோபிக் - ரோபோட்டிக் குடலிறக்கம் - வயிறு மறுசீரமைப்பு சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் சி.பழனிவேலு, மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி மருத்துவர் எஸ்.அசோகன், இயக்குநர் மருத்துவர் பி.செந்தில்நாதன், மருத்துவர் தீபக் சுப்பிரமணியம், தென்சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் உடன் உள்ளனர். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

சென்னை பெருங்குடி ஜெம் மருத்துவமனையில் ஜெம் லேப்ராஸ்கோபிக் - ரோபோட்டிக் - குடலிறக்கம் - வயிறு மறுசீரமைப்பு சிகிச்சை மையம்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை பெருங்குடி ஜெம் மருத்துவமனையில், ஜெம் லேப்ராஸ்கோபிக் - ரோபோட்டிக் குடலிறக்கம் - வயிறு மறுசீரமைப்பு சிகிச்சை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில், ‘ஜெம் லேப்ராஸ்கோபிக் - ரோபோட்டிக் குடலிறக்கம் - வயிறு மறுசீரமைப்பு சிகிச்சை மையம்’ தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மருத்துவமனையின் தலைமைச் செயல் அதி
காரி மருத்துவர் எஸ்.அசோகன், இயக்குநர் மருத்துவர் பி.செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் சி.பழனிவேலு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் சி.பழனிவேலுவின் மருத்துவத் துறைக்கான சேவை பாராட்டத்தக்கது. உலக அளவில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். தென்சென்னை பகுதியில் இந்த மருத்துவமனை அமைந்திருப்பது இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடலிறக்கப் பிரச்சினையால் ஆண்கள் 27 சதவீதம், பெண்கள் 30 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்படுவதாக மருத்துவர் சி.பழனிவேலு தெரிவித்தார். குடலிறக்கப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் வலியால் அவதிப்படுவார்கள். அறுவை சிகிச்சை செய்தாலும் திரும்பவும் வருவதற்கு 10 சதவீதம் வாய்ப்புள்ளது. மாதக்கணக்கில் ஓய்வில் இருக்க வேண்டும்.

அந்த நிலையை மாற்றி, சிறு துளையின் மூலம் சிகிச்சையளித்து ஓரிரு நாளில் இயல்பு நிலைக்கு திரும்ப வைப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. முகத்தை மறுசீரமைப்பு செய்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த மருத்துவமனையில் வயிறு மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. மருத்துவர் சி.பழனிவேலுவின் சிகிச்சை முறைகள்தான் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இது ஒரு தமிழருக்கு கிடைத்த பெருமையாகும். இவர் எழுதிய ‘லேப்ராஸ் கோபிக் ஹெர்னியா’ என்ற நூல் கொரியா, ஸ்பானிஷ், சீன மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர் சி.பழனிவேலுவின் மருத்துவ சேவை எல்லா காலத்திலும், எல்லோராலும் மறக்க முடியாததாக இருக்கும்.

இந்த மருத்துவமனையில் 75 படுக்கைகளை அமைத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது. இந்தியாவில் தயாராகும் மொத்த தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வருகிறது. ஆனாலும், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 கோடியே 68 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு 2 தவணைகளில் தடுப்பூசி போட வேண்டும். இதற்கு 11 கோடியே 36 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும். தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 64 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் தடுப்பூசி போட்டு முடிக்க இன்னும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும்.

மத்திய அரசு கொள்முதல் செய்யும் 75 சதவீத தடுப்பூசிகள் போக, மீதமுள்ள 25 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்துகொள்ளலாம். ஆனால், தனியார் மருத்துவமனைகள் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே கொள்முதல் செய்கின்றன. அதனால்தான் மத்திய அரசு 90 சதவீத தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மூன்றாவது அலை அச்சமும் உள்ளது. கரோனா பரவலை தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது. அதனால், ஜெம் மருத்துவமனை அதிக அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு போட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் தென்சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், மருத்துவர் தீபக் சுப்பிரமணியம் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT