தமிழகம்

புதுச்சேரியில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான இலவச கல்வி திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுச்சேரிக்கு வருகை தந்திருந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் நேற்று ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், ஏடிஜிபி ஆனந்தமோகன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது எஸ்சி, எஸ்டி மக்களுக்கான திட்டங்களை காலதாமதம் இல்லாமல் உடனேநிறைவேற்ற வேண்டும். வன்கொடுமை சட்டத்தின் கீழ் வரும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடாத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கடத்தி சென்று தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்ந்து, புதுச்சேரியில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார். இறுதியாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநருடன் ஆலோசனை செய்தார். அவருடன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தமிழ்நாடு அலுவலக இயக்குநர் சுனில்குமார் பாபு, முதுநிலை ஆய்வாளர் லிஸ்டர், ஆலோசகர் ராமசாமி ஆகியோரும் இருந்தனர்.

பின்னர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிறைய எஸ்சி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்காமல் உள்ளது. காரணம் அவர்கள் ஆன்லைன் போர்டெலில் பதிவு செய்யாமல் உள்ளனர். அதில் பதிவு செய்தால் தான் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க முடியும். அதனை உடனே செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் 1 முதல் ஆராய்ச்சி கல்வி வரை பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் யார் வேண்டுமானாலும் புகாரை பதிவு செய்யலாம். மேற்கு வங்கத்தில் இதுவரை 4,220 புகார்கள் பதிவாகியுள்ளது. இதில் பதிவான புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை சட்டத்தின் கீழ் வரும் புகாரை சரியாக பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்குகளை பதிவு செய்வோருக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு தொகையும் உடனே வழங்க வேண்டும். கொலை, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு தொகையாக ரூ.4,12,500-ஐ உடனே வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT