நன்னிலம் அருகே திருட்டுப் பழி சுமத்தியதால் மனமுடைந்த இளம்பெண் எலி பேஸ்ட் தின்று தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது உறவினர்கள் 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள கள்ளடிமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் சாதனா(20). பிளஸ் 2 படித்துள்ள இவர், தனியார் நிதிநிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.
இந்நிலையில், பணிநிமித்தமாக கடந்த 2-ம் தேதி தீபமங்கலம் என்ற கிராமத்துக்கு சாதனா சென்றார். அங்கு தனது உறவினர் இளையராஜா என்பவரின் 2 வயது குழந்தையுடன் சாதனா சிறிது நேரம் விளையாடி விட்டு அங்கிருந்து சென்றார். அதன்பின், அந்தக் குழந்தை அணிந்திருந்த 4 கிராம் தங்க செயின் காணாமல் போனதையறிந்த இளையராஜா மற்றும் அவரது உறவினர்கள் சாதனாதான் செயினை எடுத்திருக்க வேண்டும் எனக் கருதி, அவரிடம் விசாரித்துள்ளனர். ஆனால், தான் நகையை எடுக்கவில்லை என சாதனா மறுத்ததால், அவரை கிராம மக்கள் முன்னிலையில் சோதனையிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சாதனாவை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரது தந்தை செந்தில்குமாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சாதனா, அங்கிருந்து மணக்கால் அய்யம்பேட்டை என்ற பகுதிக்குச் சென்று, எலி பேஸ்டைத் தின்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, சாதனாவின் தந்தை செந்தில்குமார், தன் மகள் இருக்கும் இடத்தை அறிந்துவந்து, அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வீட்டுக்கு வந்த சிறிதுநேரத்திலேயே சாதனா வாந்தியெடுத்ததால், உடனடியாக அவர் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டா்ர. அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சாதானா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து சாதனாவின் தந்தை செந்தில்குமார், குடவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சாதனாவை தற்கொலைக்குத் தூண்டியதாக, அவரது உறவினர்களான இளையபாரதி(28), அய்யப்பன்(30) ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.