குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படாததால் அருவி அருகில் நின்று புகைப்படம் எடுக்கும் பொதுமக்கள். 
தமிழகம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

செய்திப்பிரிவு

தொடர் மழையால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சில அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை அம்பாசமுத்திரத்தில் 11 மி.மீ., பாபநாசத்தில் 9, சேரன்மகாதேவியில் 2.60, ராதாபுரத்தில் 2, சேர்வலாறு, திருநெல்வேலியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் பாபநாசம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணைக்கு விநாடிக்கு 2,921 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 1,405 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 117.50 அடியாக இருந்தது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 118.83 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 120 கனஅடி நீர் வந்தது. 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 76.30 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 16.65 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 11.93 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 28.75 அடியாகவும் இருந்தது.

இதேபோல், தென்காசி மாவட்டத்திலும் பரவலாக சாரல் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணையில் 24 மி.மீ., அடவிநயினார் அணையில் 18, ஆய்க்குடியில் 14, கடனாநதி அணையில் 6, ராமநதி அணையில் 5, செங்கோட்டையில் 5, தென்காசியில் 1.40, சிவகிரியில் 1 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணைக்கு விநாடிக்கு 170 கனஅடி நீர் வந்தது. 70 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 69.80 அடியாக இருந்தது. ராமநதி அணைக்கு 80 கனஅடி நீர் வந்தது. 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 61.25 அடியாக இருந்தது. அடவிநயினார் அணைக்கு 90 கனஅடி நீர் வந்தது. 20 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் இரண்டரை அடி உயர்ந்து 117.50 அடியாக இருந்தது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 63 அடியாக இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் இருந்தது. மாவட்டத்தில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது.

குமரியில் வெள்ள அபாயம் நீங்கியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டிய கனமழை நின்றதையடுத்து பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் அடைக்கப்பட்டது. இதனால் வெள்ள அபாயம் நீங்கியது.

குமரி மாவட்டத்தில் கோடை காலம் போன்று வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த 9-ம் தேதி இரவில் இருந்து நேற்று முன்தினம் காலை வரை மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. இதனால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து உபரிநீர் திறந்து விடப்பட்டதால் குழித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு அருவி மற்றும் ஆறு, கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 4,500 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டதால் கோதையாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ள அபாயம் ஏற்பட்டதையடுத்து அணைகள், கரையோரப் பகுதிகளில் பொதுப்பணித்துறை நீர்ஆதார பிரிவினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து மழை நின்றது. அதிகபட்சமாக சிவலோகத்தில் 27 மி.மீ., மழை மட்டுமே பதிவானது. மலையோரப் பகுதிகளில் மட்டும் சாரல் நீடித்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்து வெள்ள அபாயம் நீங்கியது. பேச்சிப்பாறை, சிற்றாறு ஒன்று அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் அடைக்கப்பட்டது. தற்போது பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 44.79 அடியாக உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 1,200 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து 506 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74.08 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 900 கனஅடி தண்ணீர் வருகிறது. சிற்றாறு ஒன்றில் 16.73 அடி, சிற்றாறு இரண்டில் 16.83 அடி, பொய்கையில் 26 அடி, மாம்பழத்துறையாறில் 53.64 அடி, முக்கடல் அணையில் 22 அடி தண்ணீர் உள்ளது.

SCROLL FOR NEXT