மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் ஆண், பெண் இருபாலருக்கும் பங்கு உண்டு என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள்தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள்தொகை தின நிகழ்ச்சி, லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மனமகிழ் மன்றத்தில் இன்று (ஜூலை 11) நடைபெற்றது. இதில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:
"நமது நாட்டில் மக்கள்தொகை 130 கோடிக்கும் மேல் இருக்கிறது. மக்கள்தொகை அதிகமாக இருந்தால் மனித வளமும் அதிகமாக இருக்கும். அதே சமயம், வளங்கள் அனைத்தையும் பகிர்ந்து அளிக்க வேண்டும். நாட்டை வளப்படுத்தவும், மக்கள் அனைவரும் பசியின்றி முன்னேற்றத்துடன் வாழ வேண்டும் என்றால் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிறது. மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் ஆண், பெண் இருபாலாருக்கும் பங்கு உண்டு. குடும்பக் கட்டுப்பாடு என்று கூறுவதைவிட குடும்பத் திட்டமிடல் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
திட்டமிட்ட குடும்பத்தை உருவாக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான குழந்தைகளே நாட்டின் செல்வங்கள். இன்றைய விஞ்ஞான உலகில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதற்கு எளிய முறைகள் இருக்கின்றன.
இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். கரோனா காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் அச்சத்துடன் இருந்தார்கள். அதனை போக்க மத்திய அரசு கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போட அனுமதி வழங்கியிருக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் இதனைத் தெரியப்படுத்த வேண்டும்.
குழந்தைகளை பாரபட்சமின்றி வளர்க்க வேண்டும். ஆண் - பெண் இருபாலருக்கும் அரவணைப்பு, கல்வி அனைத்தையும் சமமாக வழங்க வேண்டும். மக்களின் பொருளாதாரம் மிகவும் முக்கியம். மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கரோனா காலத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பெண்கள் தங்கள் கணவர், குழந்தைகள் மீது அக்கறை செலுத்துவது போலவே தங்களது நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆண்கள் பெண்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
புதுச்சேரியை பாதுகாப்பான மாநிலமாக மற்ற வேண்டும்".
இவ்வாறு ஆளுநர் தெரிவித்தார்.
விழாவில், மாநில சுகாதாரத் திட்ட இயக்குநர் ஸ்ரீராமலு, துணை இயக்குநர் (குடும்ப நலம்) அனந்த லட்சமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.