பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் 3 மாதங்களுக்குப் பிறகு கரோனா உயிரிழப்பு இல்லை: புதிதாக 145 பேருக்கு தொற்று பாதிப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 145 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (ஜூலை 11) வெளியிட்ட தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 5,821 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 118 பேருக்கும், காரைக்காலில் 16 பேருக்கும், ஏனாமில் 4 பேருக்கும், மாஹேவில் 7 பேருக்கும் என, மொத்தம் 145 (2.49 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. கடந்த ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகு தற்போது உயிரிழப்பு இல்லை. ஆரம்பத்தில் குறைவாக இருந்த உயிரிழப்பு, படிப்படியாக அதிகரித்து மே 23-ம் தேதி உச்சத்தில் இருந்தது. அன்றைய தினம் அதிகபட்சமாக 34 பேர் வரை கரோனாவுக்கு உயிரிழந்தனர். அது படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது உயிரிழப்பு இல்லை. இதன் மூலம் 3 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,769 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் இருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 976 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, மருத்துவமனைகளில் 251 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,254 பேரும் என, மாநிலம் முழுவதும் மொத்தம் 1,505 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக 213 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 702 (97.25 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 13 லட்சத்து 85 ஆயிரத்து 152 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 11 லட்சத்து 83 ஆயிரத்து 432 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என, மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 42 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT