அரசு பேருந்து ஓட்டுநர் செல்வராஜ் 
தமிழகம்

பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்: பேருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த சோகம்

எஸ்.கோவிந்தராஜ்

கோபி அருகே அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பயணிகளின் உயிரைக் காப்பாற்ற பேருந்தை நிறுத்திவிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்த மணியன் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (52). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இன்று (ஜூலை 11) காலை கவுந்தப்பாடியில் இருந்து பெருந்துறை செல்லும் அரசு பேருந்தை செல்வராஜ் ஓட்டிச் சென்றுள்ளார்.

வெள்ளாங்கோயில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டுள்ளார். மீண்டும் பேருந்தை எடுக்க முயற்சித்தபோது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பேருந்தின் நடத்துநர் கனகசபாபதியிடம் அவர் தெரிவித்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அவர், செல்வராஜை சிறுவலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதை உணர்ந்ததும், பேருந்தை தொடர்ந்து இயக்காமல், நடத்துநரிடம் செல்வராஜ் தகவல் தெரிவித்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவர் அதனைப் பொருட்படுத்தாமல், பேருந்தை இயக்கி இருந்தால், பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் வாய்ப்பு உள்ளது. தனது உயிர் போகும் தருணத்திலும், பயணிகளைக் காக்கும் வகையில் செயல்பட்ட ஓட்டுநர் செல்வராஜின் மரணம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT