சமூகத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியோர் நலனுக்கு அரசுமுன்னுரிமை அளிக்க வேண்டும். ஏழைகளுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று முதல்வருக்கான பொருளாதாரக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று முன்தினம் நடந்தது. அப்போது முதல்வர்ஸ்டாலின், தமிழகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு காரணமான ‘திராவிட மாடல்’வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார். இந்த வளர்ச்சியின் பயன்கள் அனைத்து பகுதிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யவும் தேவையான ஆலோசனைகளை வழங்க குழுவினரை கேட்டுக் கொண்டார்.
பின்னர், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார். தொடர்ந்து குழு உறுப்பினர்கள் கூறியதாவது:
பொருளாதார அறிஞர் எஸ்தர்டஃப்லோ: தகுந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். சமூகத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய, குறிப்பாக முதியோர் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்: கரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்களை மீட்க தேவையான உதவிகளை அரசுசெய்ய வேண்டும். பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடுசெய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்: உற்பத்தி, சேவைகள், உயர்கல்வி போன்ற பல துறைகளிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பன்முகத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும். இத்தகைய வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், மின்வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
பேராசிரியர் ஜீன் ட்ரீஸ்: அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். ஏழைகளுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
மத்திய முன்னாள் நிதித் துறைசெயலர் எஸ்.நாராயணன்: அரசுத்திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பல்வேறு அரசு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும். வரி நிர்வாகம் சரியாகமுறைப்படுத்தப்பட்டு, அரசின் வருவாய் பெருக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.