தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவும் நிலையில், 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு கொண்டுவரப் பட்டன.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும்மகாராஷ்டிரா மாநிலம் புனே சீரம் நிறுவனத்தில் உற்பத்தியாகும் இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்துமாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.
தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்ததால், தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால். மையங்களில் இருப்புக்கு ஏற்றபடி டோக்கன் விநியோகித்து தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 1.61 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் சில தினங்களாக பல மையங்கள் மூடப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் டெல்லி சென்ற தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குமாறு வலியுறுத்தினார். அதற்கு, வரும் 12-ம் தேதிக்குள் 15.87 லட்சம் தடுப்பூசிகளை வழங்குவதாக அவர்கள் உறுதி அளித்தனர். அதன்படி, 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், குளிர்சாதன வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.