கீழணையில் இருந்து வடவாறு வழியாக காவிரி தண்ணீர் வீராணம் ஏரிக்குள் செல்கிறது. 
தமிழகம்

காவிரி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்தது: கடலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

காவிரி தண்ணீர் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வந்தது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி காவிரி தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூன் மாதம்16-ம் தேதி கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஜூன் மாதம் 24-ம்தேதி இரவு கல்லணைக்கு வந்து சேர்ந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கீழணையில் இருந்து வடவாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு அது வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று காலை வீராணம் ஏரிக்கு காவிரி தண்ணீர் வந்து சேர்ந்தது. விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பும் நோக்கத்தோடு ஏரியை நிரப்ப பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இதன் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப்பகுதிகளில் 44 ஆயிரத்து 850 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஏரியின் முழு கொள்ளவும் தண்ணீரை நிரப்பிட முடிவு செய்துள்ளோம். சென்னைக்கு தண்ணீர் அனுப்பப்படும். விவசாய பாசனத்துக்கும் தேவையான தண்ணீர் தரப்படும் என்றனர். வீராணம் ஏரி நிரம்ப உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

வீராணம் ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப்பகுதிகளில் 44 ஆயிரத்து 850 ஏக்கர் பாசனம் பெறுகிறது.

SCROLL FOR NEXT