முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் அதிதீவிர ஆதரவாளர்கள் அவரது 20 ஆண்டுகால அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தலைமையில் புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சுவரொட்டி, தொலைக்காட்சி விளம்பரங்கள் என இப்போதே பரபரப்பு கூட்டுகின்றனர்.
‘இணைந்து நாம் 2020’ (யுனைடெட் விஷன்) என்ற அமைப்பின் தலைவ ராக இருப்பவர் ஆர்.செந்தூரான். கல்லூரி பேராசிரியரான இவர், 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்வில் அப்துல் கலாமை சந்தித்தார். அதன் பிறகு பணியை விட்டுவிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களை நல்வழிப்படுத்தும் உந்துசக்தியாக செயல்பட்டு வரு கிறார். கடந்த 6 ஆண்டுகளில் 18 லட்சம் இளைஞர்களை சந்தித்துள்ளார்.
இவரது தலைமையில் செயல் படும் இளைஞர்கள், அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரான பொன்ராஜை அரசியல் இயக்கத் துக்கு தலைமையேற்க வருமாறு அழைத்துள்ளனர். அதற்கு பொன் ராஜ் இதுவரை இசைவு தெரிவிக்க வில்லை.
இந்நிலையில், ஆர்.செந்தூரான் ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பொன்ராஜின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் தோணு கால் கிராமத்தில் நேற்று கூடினர். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் பேசினர். அவர்கள் அனைவருமே பொன்ராஜை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இன்றும் அதே கிராமத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
பொன்ராஜ் தலைமையில் நாளை ராமேசுவரம் சென்று, அப்துல் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டு அரசியலில் அதிகாரபூர்வமாக இறங்க திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் செந்தூரான் கூறியதாவது:
கலாமை நேரில் பார்த்திராத லட்சக்கணக்கான நபர்களுக்கு இன்றுவரை அவர் ஒரு மாபெரும் உந்து சக்தியாக திகழ்கிறார். சில மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த என்னை, ஒரே நாளில் பல லட்சம் இளைஞர்களை ஊக்குவிக் கும் பணியில் உத்வேகத்துடன் ஈடுபட வைத்தவர் கலாம். அவருடன் 20 ஆண்டுகள் இருந்தவர் பொன்ராஜ். நிறைய விஷயங்களை அவரிடம் கலாம் பொதிந்து வைத்திருப்பார். அதனால்தான் பொன்ராஜை அரசிய லுக்கு வருமாறு அழைக்கிறோம்.
ஆட்சி செய்ய நேர்மையும் எளிமையும் கொண்ட நிர்வாகிகள் தேவை. அந்த குணங்களும் பொன்ராஜிடம் இருக்கிறது. பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்விதமாக நல்லாட்சி வழங்க அவரை அரசியலுக்கு வருமாறு வேண்டிக் கொள்கிறோம். நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் சுவரொட்டி, தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு செலவழிக்கின்றனர்’’ என்றார்.