குடும்ப வறுமையால் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள மாணவர் கவுதம். 
தமிழகம்

குடும்பத்தின் வறுமை காரணமாக படிப்பை கைவிட்டு நெசவு தொழிலில் ஈடுபடும் மாணவர்கள்: கல்வி கனவு தகர்ந்துவிட்டதாக வேதனை

இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் குடும்பத்தின் வறுமை காரணமாக ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்க வசதி இல்லாமல், படிப்பை கைவிட்டுவிட்டு பெற்றோருடன் இணைந்து நெசவுத் தொழிலில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் கிராமத்தில் நெசவுத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். கரோனா ஊரடங்கு காரணமாக, அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துணிக் கடைகள் திறக்கப்படாததால், பட்டுச் சேலை விற்பனை அடியோடு சரிந்தது. இதனால், வேலையின்றி பரிதாப நிலைக்கு நெசவுத் தொழிலாளர்களின் குடும்பம் தள்ளப்பட்டுள்ளது.

அதன் எதிரொலியாக, அவர்களது வாரிசுகளின் கல்வி கனவு தகர்ந்தது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், மாணவர்களிடம் முழுமையாக சென்றடையவில்லை. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படுகிறது.

இதற்காக, பிரத்யேக செல்போன் வாங்கும் நிலையில் நெசவுத் தொழிலாளர்கள் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை இல்லை. இதனால், பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலரும், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினரான சுரேஷ் என்பவர் கூறும்போது, “கணவன், மனைவி உழைப்பின் மூலம், ஒரு மாதத்துக்கு 4 பட்டுச் சேலைகளை நெசவு செய்ய முடியும். அதன்மூலம் அவர்களுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கிடைக்கும். இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக, நெசவுத் தொழில் முடங்கியது. இதனால், நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்பம் நடத்த முடியாத நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெறுவதால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி கனவு தகர்ந்துள்ளது. மேலும், கடந்தாண்டு நடைபெறாத பள்ளிக்கு, கல்வி கட்டணம் கேட்டு நிர்வாகம் நெருக்கடி கொடுக்கிறது. ரூ.10 ஆயிரம் கொடுத்து செல்போன் வாங்கும் நிலையில், தொழிலாளர்கள் குடும்பத்தின் பொருளாதாரம் இல்லை. உணவுக்கே வழியில்லை என்ற நிலை இருக்கும் போது, கடந்தாண்டு கல்வி கட்டணத்தை எவ்வாறு செலுத்த முடியும், செல்போன் எப்படி வாங்க முடியும். இதனால், படிப்பை கைவிட்டு பெற்றோருடன் நெசவுத் தொழிலில் மாணவர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும் வரை ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க, குழுக் களாக இணைந்து பாடம் படிக்க செல்போன் கிடைத்தால், மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்றார்.

இதுதொடர்பாக மாணவர்கள் கூறும்போது, “ஒவ்வொரு மாணவரும் மருத்துவர், பொறி யாளர், வேளாண் அலுவலர், ஆட்சியர் போன்ற கனவுகளில் படித்து வந்தோம். ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் பிறந்த எங்களின் கல்வி கனவு, கரோனா ஊரடங்கால் தகர்க்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் இல்லை. இந்தாண்டும் பள்ளிகளை திறக்கவில்லை என்றால், எங்களை போன்ற பல ஆயிரம் மாணவர்களின் கல்வி பயணம் முடிவுக்கு வந்துவிடும். பள்ளிகள் திறக்கப்படும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT