உரிம விதிகளுக்கு உட்பட்டு குவாரிகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தாலுக்கா, திருநீர்மலை நகரப் பஞ்சாயத்தில் விதிகளை மீறிச் செயல்படும் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்து, குவாரியை மூட உத்தரவிடக் கோரி உதயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விதிமீறிச் செயல்படும் குவாரியை மூடக்கோரி பல முறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உரிம விதிகளுக்கு உட்பட்டு குவாரிகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்துவைத்தனர்.