சேலம் கருப்பூர் காளியம்மன் கோயில் நில அபகரிப்பு மற்றும் கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர், வருவாய் அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான சேலத்தைச் சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுக்காவில் உள்ள கருப்பூர் காளியம்மன் கோயில் நிலத்தை அபகரித்து கே.பி.வித்யாசாகர், ராமமூர்த்தி ஆகியோர் திருமண மண்டபம், கட்டிடம் கட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசிடம் 2014ஆம் ஆண்டு முதல் புகார் அளித்ததாகவும், அதில் புகாரில் விசாரணை நடத்திய பேரூராட்சிகளின் இயக்குநர், ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் நிலத்தை மீட்க 2017ஆம் ஆண்டு ஜூன் 22-ல் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், கருப்பூர் பேரூராட்சி செயல் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி கோயில் நிலத்தை மீட்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஆக்கிரமிப்பின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றமும், பேரூராட்சிகளின் இயக்குநரும் உத்தரவிட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்காதது குறித்து, சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் அதிகாரியும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை 22ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.