தமிழகம்

சீனியர், ஜூனியர் என்று வேறுபாடு பார்த்தால் கட்சியை வளர்க்க முடியாது: புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் கருத்து

அ.தமிழன்பன்

சீனியர், ஜூனியர் என்று வேறுபாடு பார்த்தால் கட்சியை வளர்க்க முடியாது எனக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் புதுச்சேரி பாஜக அமைச்சர் ஏ.நமச்சிவாயம் பேசினார்.

பாஜகவின் காரைக்கால் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 10) காரைக்காலில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி தலைமை வகித்தார். புதுச்சேரி மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன், புதுச்சேரி அமைச்சர் ஏ.நமச்சிவாயம், சட்டப்பேரவை நியமன உறுப்பினர் அசோக் பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். மாநிலத் துணைத் தலைவர்கள் எம்.அருள்முருகன், நளினி கணேஷ்பாபு, முன்னாள் எம்எல்ஏ வி.கே.கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் வி.சாமிநாதன் பேசுகையில், “காங்கிரஸ் இல்லாத புதுச்சேரியை உருவாக்குவோம் என்று பாஜக சொன்னது நடந்துள்ளது. புதுச்சேரி அரசில் சரிபாதி அதிகாரத்தில் பாஜக உள்ளது. வெற்றி, தோல்வி பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றக்கூடிய ஒரே கட்சி பாஜக மட்டுமே. புதுச்சேரியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும் வெற்றிபெற கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். காங்கிரஸ், திமுகபோல குடும்ப வாரிசு அரசியல் இல்லாமல், கட்சியில் கடுமையாக உழைக்கும் எந்தவொரு தொண்டருக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கக்கூடிய கட்சி பாஜக” என்றார்.

அமைச்சர் ஏ.நமச்சிவாயம் பேசும்போது, “மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்துக் கட்சியினர் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு அதிக நிதியைப் புதுச்சேரி மாநிலத்துக்குக் கொடுத்துள்ளது. ஆனால், முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி அதை இருட்டடிப்பு செய்து மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை எனச் சொல்லி வந்தார். காரைக்கால் மாவட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற எதைச் செய்யத் தவறினோமோ அதைச் சரிப்படுத்தி, உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். ஜூனியர், சீனியர், புதிதாக வந்தவர்கள் என்ற வேறுபாடுகள் பார்க்காமல் செயலாற்ற வேண்டும். அவ்வாறு வேறுபாடு பார்த்தால் கட்சியை வளர்க்க முடியாது. இதனைத் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

SCROLL FOR NEXT