மூத்த தமிழறிஞரும், இலக்கியவாதியுமான முனைவர் சோ.சத்தியசீலன் வயது மூப்பின் காரணமாகக் காலமானார்.
பெரம்பலூரைப் பூர்வீகமாகக் கொண்ட முனைவர் சோ.சத்தியசீலன் (88), கடந்த சில ஆண்டுகளாக திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனியில் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, நேற்று இரவு (ஜூலை 9) சோ.சத்தியசீலன் தனது வீட்டில் காலமானார்.
மூத்த தமிழறிஞரும், இலக்கியவாதியுமான இவர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக 10 ஆண்டுகள், கல்லூரிப் பேராசிரியராக 10 ஆண்டுகள், கல்லூரி முதல்வராக 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேலும், பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாடத்திட்டக்குழு தலைவர், ஆட்சிக்குழு உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்த இவருக்கு ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டு.
அதன் காரணமாக, வயலூர் முருகன் கோயில் அறங்காவலர், சமரச சன்மார்க்க சங்கத் தலைவர் உள்ளிட்ட பதவிகளிலும் இருந்துள்ளார். இதுதவிர, திருச்சி கம்பன் கழகம், சேக்கிழார் மன்றம், திருஈங்கோய்மலை திருவள்ளுவர் மன்றம் ஆகியவற்றின் தலைவராகவும், திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழு உறுப்பினர், மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்க சிறப்புத் தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார்.
'நேரு வழி நேர்வழி', 'அழைக்கிறது அமெரிக்கா', 'திருக்குறள் சிந்தனை முழக்கம்' உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ள இவர், அமெரிக்கா, கனடா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், குவைத், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார். மேலும், சுமார் 10,000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகள், 1,000க்கும் மேற்பட்ட வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார்.
இவரது சேவையைப் பாராட்டி, தமிழக அரசு சார்பில் 'கலைமாமணி' விருதும், 'சொல்லின் செல்வர்' பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் இவருக்கு 'நாவுக்கரசர்' என்ற பட்டத்தைச் சூட்டியுள்ளார். இதுதவிர, பல்வேறு அமைப்புகள் சார்பில் பட்டங்கள், பொற்கிழிகள், விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இவரது உடல் இன்று (ஜூலை 10) மாலை திருச்சி, சேதுராமன் பிள்ளை காலனியிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, உழவர் சந்தை அருகே உய்யக்கொண்டான் கரையிலுள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்துக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இவரது உடலுக்கு திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, புலவர் திருவாரூர் சண்முகவடிவேல், கவிஞர் மரபின் மைந்தன் ம.முத்தையா, திருச்சி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிகள் பிரிவுத் தலைவர் நடராஜன், திருச்சி நகைச்சுவை மன்றச் செயலாளர் சிவகுருநாதன், திருச்சி கம்பன் கழகச் செயலாளர் மாது மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், மொழிப் பற்றாளர்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.