சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 500 பேரிடம் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் நேர் காணல் நடத்தினர்.
திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை விருப்ப மனுக் கள் பெறப்பட்டன. 234 தொகுதிக ளிலும் போட்டியிட மொத்தம் 5,648 விருப்ப மனுக்கள் வந்துள்ளன.
விருப்ப மனு அளித்தவர் களிடம் பிப். 22 முதல் நேர் காணல் நடத்தப்படும் என அறிவிக் கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர் காணல் தொடங்கியது. காலை யில் கன்னியாகுமரி, திருநெல் வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் மாலையில் விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் நேர் காணல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், நேற்று இரவு வரை 4 மாவட்டங்களுக்கான நேர்காணல் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழ கன், பொருளாளர் ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேர்காணலை நடத்தினர். முதலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிக ளுக்கும் விருப்ப மனு அளித்த 135 பேரிடம் நேர்காணல் நடத்தப் பட்டது. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி.க்கள் ஹெலன் டேவிட்சன், ஆஸ்டின், தற்போதைய எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜான் நிக்கல் சன், நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரம் தொகுதிக்கு விருப்ப மனு அளித்துள்ள சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடை யப்பன் உள்ளிட்டோர் நேர் காணலில் பங்கேற்றனர். முதல் நாளில் சுமார் 500 பேரிடம் நேர் காணல் நடத்தப்பட்டது.
நேர்காணலில் பங்கேற்றவர்க ளிடம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன. திமுக வுக்கு, கூட்டணி கட்சியான காங்கி ரஸுக்கு உங்கள் தொகுதியில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது? திமுக போட்டியிடலாமா அல்லது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விடலாமா? உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும்? தேர்தல் நேரத்தில் நெருக்கடி ஏற்படுத்தும் அளவுக்கு சொந்த பிரச்சினைகள், வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா? கட்சியை வெற்றி பெறச் செய்ய என்னென்ன யுக்திகள், திட்டங்கள் வைத்துள்ளீர்கள்? புதிய வாக் காளர்கள், இளைஞர்கள், பெண் களைக் கவர என்ன திட்டம் வைத் துள்ளீர்கள்? போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால், கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டதாக நேர்காணலில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
வரும் 27-ம் தேதி வரை மாவட்டவாரியாக நேர்காணல் நடைபெறவுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிட மனு அளித்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் திருப்பித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.