தமிழகம்

முதல்வர் நிவாரண நிதிக்கு ஜூலை 8 வரை ரூ.472.68 கோடி வரவு: புதிய இணையதளத்தை தொடங்கி வைத்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

செய்திப்பிரிவு

முதல்வர் நிவாரண நிதிக்கு ஜூலை 8-ம் தேதி வரை ரூ.472.68 கோடி நிதி சேர்ந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரி வித்தார்.

தமிழகத்தில் கடந்த மே 7-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. அப்போது கரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால், கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கும்படி முதல்வர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, நேரிலும் பல்வேறு வழிகளிலும் முதல்வர் நிவாரண நிதிக்கு அதிகளவில் நிதி சேர்ந்து வருகிறது.

இந்நிலையில், நிதி வருகை, செலவிடப்படுவது குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய,https://cmprf.tn.gov.in/ என்ற தனியான இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் பயன்பாட்டை நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்த னர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் கூறியதாவது:

வெளிப்படைத் தன்மை

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றதும், ‘கரோனா குறித்த எந்ததகவலையும் மறைக்காமல் வெளிப்படையாக சொல்லுங்கள் என்றும்,முதல்வர் நிவாரண நிதிக்கு பெறப்பட்ட தொகை எவ்வளவு, என்றுயாரால் வழங்கப்பட்டது, அதைஅரசு எப்படி பயன்படுத்துகிறது என்று வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஏற்கெனவே முதல்வர் நிவாரண நிதிக்காக இருந்த இணையதள பக்கம் புதுப்பிக்கப்படாமலும், பணம் செலுத்தும் முறைகளில் இணைப்புகள் இல்லாமலும் இருந்தது. நிதி வழங்கும்போது கரோனாவுக்காக என்று பிரித்துக் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். எனவே, மே 6-க்கு முன் வந்த நிதி தனி கணக்காகவும், மே 7-ம்தேதிக்குப்பின் வந்த நிதியை கரோனா கணக்காகவும் வைக்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, கேரள அரசின் இணையதளத்தை மாதிரியாக எடுத்து அதைவிட சிறப்பாக புதிய இணையதளம், நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ‘பிஎம்கேர்’இணையதளத்தில் எந்த தணிக்கையும், வெளிப்படைத்தன்மையும் இல்லை. ஆனால், இந்த இணையதளத்தில் வெளிப்படைத்தன்மையுடன் விவரங்கள் உள்ளன. வந்தபணம், செலவழிக்கப்பட்ட தொகைகுறித்த தகவல்கள் உள்ளன.

முதல்வர் மீது நம்பிக்கை

அதன்படி, ஜூலை 8-ம் தேதி வரை ரூ.472 கோடியே 68 லட்சத்து52,648 வந்துள்ளது. அதேநேரம், கடந்த மார்ச் மாதம் முதல், இந்தஆண்டு மே 6-ம் தேதி வரை 14 மாதத்தில் ரூ.400 கோடி அளவுக்கேவந்துள்ளது. வெளிப்படைத்தன்மை, முதல்வர் மீதான நம்பிக்கையின் அடையாளமாக இந்த அளவுக்கு தொகை வந்துள்ளது. இந்த நிதியில் இதுவரை ரூ.241 கோடி பல்வேறு பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இ-பட்ஜெட்

இந்தாண்டு இ-பட்ஜெட் தாக்கல்செய்யப்படுகிறது. பல கணக்குகளையும் ஆய்வு செய்ய வசதியாக ‘எக்செல்’ அடிப்படையில் கொடுக்கஉள்ளோம். இ-பட்ஜெட் குறித்துஏற்கெனவே 2017-ம் ஆண்டு அப்போதைய சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதினேன்.ஆனால், செயல்படுத்தப்படவில்லை. தற்போது இந்த இ-பட்ஜெட் முறை மூலம், 2,500 மரங்கள்வரை, காகிதத்துக்காக வெட்டப்படாமல் காப்பாற்றப்படும். இதன் மூலம் பல கோடிகள் மிச்சப்படும். தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, நிதிநிலை அறிக்கைக்கு முன்னதாக விரை வில் வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT