நெல் கொள்முதல் நிலையங்களில் எங்கு தவறு நடைபெற்றுள்ளது என்பதை குறிப்பிட்டால் அரசுநடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு உணவு அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார்.
நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களாக செயல்படும் திமுகவினரை கட்டுப்படுத்தவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதலமைச்சரின் ஆட்சியில் உப்பிலியாபுரம் பகுதியில் கடந்தாண்டு 5 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்ட நிலையில் தற்போது 12 செயல்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் 2,39,534 டன் கொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு அதே காலத்தில் 2,97,210 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்தபின் திருச்சியில் 3 மடங்குக்கு மேலான அளவிலும், டெல்டா மாவட்டங்களில் 24 சதவீதத்துக்கு அதிகமாகவும் நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவரத்தை அறியாமல் அவர் பேசுகிறார். தினசரி ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யலாம் என அவர் ஆட்சியில் அறிக்கை விட்டுவிட்டு, தற்போது ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்வதாக அறிக்கை விடுகிறார்.
அவர் ஆட்சிக்காலத்தில் நெல்லை சேமிக்க 50 ஆயிரம் டன் கொள்ளளவிலான சைலோக்கள் 2018-ல் அவரால் தொடங்கி வைக்கப்பட்டு, முழுமையாக செயல்படாமல் உள்ளது. அதை செயல்படுத்த ரூ.14 கோடி தேவைப்படும் என்பதை அவர் அறிவாரா? ஆண்டுக்கு27,500 அரவை திறன் கொண்ட அரிசி ஆலைகளுக்கு, 50 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சைலோக்கள் கட்டியதை என்னவென்று சொல்வது?
முன்னாள் முதல்வர் பழனிசாமி புகார் சொல்லாமல், தீர விசாரித்து எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்று குறிப்பிட்டு சொன்னால் அரசு நடவடிக்கை எடுக்க தயங் காது.
இவ்வாறு அமைச்சர் அர.சக்கர பாணி தெரிவித்துள்ளார்.