தமிழகத்துக்கு வரும் 12-ம்தேதிக்குள் 15.87 லட்சம் தடுப்பூசிகளை வழங்குவதாக மத் திய அரசு தெரிவித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக ஜூலை 9-ம் தேதி (நேற்று) டெல்லி சென்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டமிட்டிருந்தார்.
திடீரென மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும் மாற்றப்பட்டார். அதனால், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் டெல்லி பயணம் தள்ளிப்போனது.
இதற்கிடையில், நேற்றுடெல்லி சென்ற சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ்பூஷண் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். பின்னர்,டெல்லியில் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பெருமளவுகரோனா பரவல் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதற்காக தமிழக அரசுக்கு, மத்திய அரசு அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
தற்போது தமிழகத்தில் கரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. எனவே, கூடுதல் தடுப்பூசிகளை வழங்கும்படி தெரிவிக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்தியில் உள்ள சவால்கள், தரச் சான்றிதழ் ஆகியவற்றால் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்த மத்திய அரசு அதிகாரிகள், வரும்12-ம் தேதிக்குள் 15 லட்சத்து 87,580 தடுப்பூசிகளை வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, 11 புதிய அரசுமருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர்சேர்க்கையை தொடங்குவதற்கான அனுமதி தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளை விரைவுபடுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர்கள், `நாங்கள் கட்டிடப்பணிகளை விரைவுபடுத்துகிறோம். காஷ்மீர், பிஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்காலிக எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள் ளது. இதேபோல, 50 முதல்100 மாணவர்களுடன் எய்ம்ஸ்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, தற்காலிகமாக அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியில் தொடங்க முடியுமா?' என்று கேட்டனர்.
கேரளாவில் ஜிகா வைரஸ்இருப்பதால், தமிழக எல்லைமாவட்டங்களை கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித் தார்.