தமிழகம்

திருப்பூரில் 5 ஆம்புலன்ஸ்களின் சேவை திடீர் நிறுத்தம்: மாற்று ஏற்பாடு இல்லாததால் பயனாளர்கள் அவதி

இரா.கார்த்திகேயன்

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே கிட்டான் (65) என்ற கூலித் தொழிலாளி நேற்று வந்து கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு அவரை முட்ட, தற்காப்புக்காக தலையை காட்டி கீழே குனிந்துள்ளார். இருப்பினும், அந்த மாடு அவரது தலையில் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தொடர்பு கொண்டும், உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதற்கிடையே காயமடைந்தவரின் தலையில் இருந்து ரத்தம் அதிகளவில் வெளியேறியது.

இதேபோல, மூன்று நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூர் பகுதியில் நிகழ்ந்த விபத்தின்போது 3 பேர் உயிரிழந்தனர். அப்போது, அப்பகுதியில் நிறுத்தப்படும் ஆம்புலன்ஸ் இல்லாத நிலை ஏற்பட்டது.

திருப்பூர் மாநகரை ஒட்டிய பெருமாநல்லூர், சின்னக்கரை, அவிநாசி, காங்கயம் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த ஆம்புலன்ஸ்கள் மற்றும் மாற்று ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 5 ஆம்புலன்ஸ்கள், 6 ஆண்டுகள் ஓடிய நிலையில், தரமற்றவை என உடனடியாக சேவையில் இருந்து நீக்கி, சென்னை கொண்டு செல்லப்பட்டன. இதனால் மாற்று ஆம்புலன்ஸ்கள் இல்லாத நிலையில், பொதுமக்கள் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பயனாளர்களின் நிலை?

இதுதொடர்பாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிலர் கூறும்போது. "திருப்பூர் மாநகர் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஊரடங்கு தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், பல்வேறு விபத்துகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. மாநகரை ஒட்டிய பகுதிகளிலுள்ள ஆம்புலன்ஸ்கள் ஒவ்வொன்றும், 3 லட்சம் கிலோ மீட்டர் கடந்துதரமற்றவை என உடனடியாக சேவையில் இருந்து நீக்கப்பட்டுசென்னை கொண்டு செல்லப்பட்டது. இந்த 5 ஆம்புலன்ஸ்களும் நாளொன்றுக்கு, தலா 10 இடங்களுக்கு செல்லும். இதனால்50 பயனாளர்களின் நிலை கேள்விக்குறி ஆகியுள்ளது.

குறிப்பாக பெருமாநல்லூர், அவிநாசி ஆகிய பகுதிகளில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளுக்கான துயரச்சாலையாக உள்ளது. ஆகவே அங்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்" என்றனர்.

தேவை அதிகரிப்பு

மாநகரை சேர்ந்த சிலர் கூறும்போது, "108 ஆம்புலன்ஸ் சேவையில் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 108 ஆம்புலன்ஸுக்கு அழைத்தால், தனியார் ஆம்புலன்ஸுகள் வருவது பிரச்சினையாக உருவெடுத்தது. இந்நிலையில், தற்போது மாநகரை ஒட்டிய பகுதிகளில் 5 ஆம்புலன்ஸ்களின் சேவை நிறுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தற்போது தளர்வுகள் நீக்கப்பட்டு,இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால் ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகரித்துள்ளது" என்றனர்.

50 ஆம்புலன்ஸ்கள் மாற்றம்

108 ஆம்புலன்ஸ் நிர்வாக அலுவலர்கள் கூறும்போது, " 6 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் கிலோ மீட்டர் ஓடிய ஆம்புலன்ஸ்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. கரோனா தொற்று காலம் என்பதால்,6 மாதங்களுக்கு முன்பே மாற்ற வேண்டியிருந்தது.

தமிழகத்தில் தற்போது 50 ஆம்புலன்ஸ்கள் தரமற்றவை என சேவையில் இருந்து நீக்கப்பட்டு, அந்த இடத்துக்கு புதிய ஆம்புலன்ஸ்கள் வந்துள்ளன. சென்னையில் இருந்து திருப்பூருக்கு புதிய ஆம்புலன்ஸ்கள் புறப்பட்டுவிட்டன. தொடர்புடைய இடங்களுக்கு அவை வந்துவிடும்" என்றனர்.

திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் 5 ஆம்புலன்ஸ் சேவை திடீரென நிறுத்தப்பட்டதால், அவசரத்துக்கு உதவாத வகையில் ஆம்புலன்ஸ் சேவை உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

SCROLL FOR NEXT