ஈரோட்டில் நடந்த தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசினார். 
தமிழகம்

ஆக்கப்பூர்வமான பணியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து

செய்திப்பிரிவு

ஒன்றிய அரசு, மத்திய அரசு என்ற சொல் விளையாட்டால் மத்திய அரசு அல்லது மாநில அரசின் அதிகாரத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியாது. எனவே, ஆக்கப்பூர்வமான பணியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் வரிகளைக் குறைப்பதுடன், நிபுணர் குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் அனுமதி இல்லாமல், மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கூறியதில், மத்திய அரசு உறுதியுடன் இருக்க வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

அரசியல் கட்சிகள் மாணவர்களைக் குழப்பக்கூடாது. கல்வியில் ஒருபோதும் அரசியல் கூடாது.

ஒன்றிய அரசு, மத்திய அரசு என்ற வார்த்தை சொல் விளையாட்டால் மத்திய அரசு அல்லது மாநில அரசின் அதிகாரத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியாது. எனவே, ஆக்கப்பூர்வமான பணியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து அந்த நேரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும்.

தமிழக அரசு கரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது.

அரசியலுக்கு இடம் தராமல், 3-வது அலையைத் தடுத்து, மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் கரோனா தடுப்பூசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT