கடலூரில் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள இரும்பினாலான பாலத்தை இடித்து தரை மட்டமாக்காமல், பகுதி பகுதியாக அப்பாலம் தானாகவே இடிந்து விழும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
கடலூர் நகரின் மையப்பகுதியில் செல்லும் கெடிலம் ஆற்றின் ஒரு கரையில் நகராட்சியின் புதுநகரும், மற்றொரு கரையில் திருப்பாதிரிப்புலியூர் பகுதியும் அமைந்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமப்பட்டன.
இதையடுத்து இரும்பு பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டு அண்ணா பாலம் என்று பெயரிடப்பட்டது. இந்த பாலம் வழியாகத் தான் தற்போது வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
பல ஆண்டுகளாக பயன் பாடின்றி இருந்த ஆங்கிலேயர் கால இரும்பு பாலத்தின் ஒரு பகுதி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அப்போது அந்த பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அதில் குடிநீர் மற்றும் புதைசாக்கடை திட்ட குழாய்கள் செல்லும் வகையில் பயன்படுத்தினர். அப்போது அதற்கு சில லட்சங்களை செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த ஆண்டு இரும்பு பாலம் உடைந்து விழுந்ததில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது. உடனடியாக சிதிலமடைந்த பாலத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கும் சில லட்சங்கள் செலவு செய்யப்பட்டது.
இதற்கிடையே கடலூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் நேற்று இரும்பு பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர்.
கடலூர் நகரில் பொன்முட்டை யிடும் வாத்தாக மாறியுள்ள இரும்பு பாலத்தை இடித்து தள்ள அரசுத் துறை அதிகாரிகளுக்கு மனமில்லை என நகர வாசிகள் கிண்டலடிக்கின்றனர்.
இரும்பு பாலம் பகுதி பகுதியாக இடிந்து விழும்போதெல்லாம் பொதுப்பணித் துறை, நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் என தனித்தனியாக வருவாய் பார்ப்பதும் வாடிக்கையாகி வருகிறது. பாலத்தை மொத்தமாக இடித்துவிட்டால், தங்களுக்கான வருவாய் குறைந்துவிடுமோ என அரசு அதிகாரிகள் அச்சப் படுகின்றனர்.
புதிய அரசாவது பாலத்தை இடித்துவிட்டு குடிநீர் குழாய்க்கு தனிப்பாதை அமைக்க முன்வரவேண்டும் என கடலூர் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.