மதுரை, கோவையில் சுருக்கெழுத்து தேர்வு மையம் அமைக்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தட்டச்சு, சுருக்கெழுத்து கணினி மைய சங்க தலைவர் சோமு சங்கர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகம் முழுவதும் அரசு அங்கீகாரம் பெற்ற 3500-க்கும் அதிகமான தனியார் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் பயிற்சி பெறுபவர்கள் சுருக்கெழுத்து தேர்வு எழுத சென்னை தரமணிக்கு செல்ல வேண்டும்.
நீதிமன்றம், ஊடகங்களில் பணிபுரிய சுருக்கெழுத்து அவசியம் என்பவதால் சுருக்கெழுத்து பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் சுருக்கெழுத்து பயிற்சி பெறுகின்றனர்.
சுருக்கெழுத்து பயிற்சி பெறும் பெண்களில் பெரும்பாலானவர்களை போக்குவரத்து செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னைக்கு தேர்வு எழுத அனுப்ப பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. இதனால் சுருக்கெழுத்து பயிற்சி பெற்றும் தேர்வெழுதாமல் அரசு வேலைவாய்ப்பை இழக்கின்றனர்.
இதனால் தென் மாவட்ட மாணவர்களின் நலனுக்காக மதுரையில் சுருக்கெழுத்து உயர்வேக தேர்வு மையம், தேர்வு விடைத்தாள் பயிற்சி மையம் அமைக்கவும், கடையநல்லூர், சிவகிரி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் மாணவர்களுக்காக புளியங்குடியில் கம்ப்யூட்டர் ஆன் ஆட்டோமேஷன் படிப்பிற்கான தேர்வு மையம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மதுரை, கோவையில் சுருக்கெழுத்து தேர்வு மையம் அமைத்தால் தென் தமிழகம், மேற்கு தமிழக மக்கள் பயன் பெற முடியும். இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை ஜூலை 26-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.