தமிழகத்தில் ஜிகா வைரஸ் பற்றி அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அருகே பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்றுஆய்வு செய்தார். அத்துடன் காஞ்சிரங்காலில் தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்தார். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 137 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கரோனா வார்டைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் தலைமையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., எம்எல்ஏக்கள் தமிழரசி, மாங்குடி, சுகாதாரத் திட்ட இயக்குநர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, மருத்துவக் கல்லூரி இயக்குநர் நாராயண பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''பதினைந்தாவது நிதிக்குழுவின் மானிய நிதி ரூ.4,619 கோடி மூலம் தமிழகத்தில் 10,839 சுகாதார நிலையங்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் சிவகங்கை மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி தன்னிறைவு பெற்றதாக மாற்றப்படும்.
பத்து ஆண்டுகளாக சுகாதார நிலையங்களைச் சீரமைக்கவில்லை. அதனால்தான் நாங்கள் சீரமைக்க முடிவு செய்துள்ளோம். ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிக்குப் பிரசவம் முடிந்து தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். இதனால் அந்த வைரஸ் பற்றி அச்சப்பட தேவையில்லை. வைரஸ்கள் உருமாறி கொண்டே இருப்பதால், பாதிப்புத் தன்மை இன்னும் புரியாமல்தான் உள்ளது.
நீதிமன்றத்தில் நீட் தேர்வு குறித்த விசாரணை வரவுள்ளது. இதற்கிடையில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவும் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. அதனால் அதுபற்றிய கருத்துகளைக் கூறுவது நன்றாக இருக்காது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் புற்றுநோயை அறிவதற்கான வசதியை ஏற்படுத்தி வருகிறோம். அதற்கான கருவிகளை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகிறோம். காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையை சர்வதேசத் தரத்தில் உயர்த்த புதிய திட்டம் தயாரித்து வருகிறோம்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20 லட்சம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் மருந்து வாங்குகின்றனர். ஆனால் இந்நோய்கள் பாதித்தோர் ஒரு கோடி பேருக்கு மேல் உள்ளனர். அவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக மக்களைத் தேடி வரும் மருத்துவத் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
இதில் வீடு, வீடாகக் கணக்கெடுக்கப்பட்டு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே வந்து மாத்திரைகள் வழங்கப்படும். மேலும் முடக்குவாதம் பாதித்தோருக்கு பிசியோதெரபி, சிறுநீரகம் பாதித்தோருக்கு டயாலிசிஸிஸ் ஆகியவை மொபைல் வாகனம் மூலம் செய்யப்படும். இதன்மூலம் ஆண்டுக்கு 5.5 லட்சம் இறப்பு என இருப்பது பாதியாக குறையும். கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கிருந்து வருவோரைக் கண்காணித்த பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கிறோம்.
மருத்துவர்களுக்கு உணவு, தங்கும் விடுதிக்கான வாடகையில் முறைகேடு நடந்துள்ளது. அதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. நாங்கள் அதில் தினமும் ரூ.30 லட்சம் வரை மிச்சப்படுத்தி வருகிறோம்''.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.