தமிழகம்

லஞ்சம் வாங்கியதாக கைதான பிஎப் மண்டல ஆணையர் உள்ளிட்ட 7 பேருக்கு ஜாமீன்

செய்திப்பிரிவு

லஞ்சம் வாங்கியதாக சென்னையில் சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் உள்ளிட்ட 7 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை சவீதா கல்வி நிறுவன தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்க வேண்டிய வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு நடந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க அந்த கல்வி நிறுவனத்திடமிருந்து ரூ.14.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் துர்கா பிரசாத் மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஏழுமலை, மணிகண்டன், சவீதா கல்வி நிறுவன ஊழியர் செங்கோட்டையன், இடைத்தரகர்கள் சுடலைமுத்து, சூரியநாராயணன், ராஜா ஆகியோரை சிபிஐ போலீஸார் கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர்.

பின்னர் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதையடுத்து துர்காபிரசாத் உள்ளிட்ட 7 பேரும் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், பிஎப் ஆணையர் துர்கா பிரசாத் உள்ளிட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதேபோல், இந்த வழக்கில் சவீதா கல்விக் குழுமங்களின் தலைவர் வீரைய்யன் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அவருக்கும் முன்ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT