தமிழகம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

செம்மொழியான தமிழ் மொழியை மேடைதோறும் புகழ்ந்து பேசி வரும் பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் இல்லை என்று ஆணை பிறப்பித்து இருப்பது தமிழுக்குச் செய்யும் துரோகம் என ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை:

''தமிழ்நாட்டில் மத்திய பாஜக அரசின் கீழ் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 2013-2014ஆம் கல்வி ஆண்டிலிருந்து இப்பள்ளிகளில் தமிழ் மொழி விருப்பப் பாடமாகப் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் தாய்மொழியான தமிழ் மொழியில் கற்பிக்க இயலாது என்றும், சமஸ்கிருதம் படித்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பிற்குச் செல்ல முடியும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

செம்மொழியான தமிழ் மொழியை மேடைதோறும் புகழ்ந்து பேசி வரும் பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி பாடம் இல்லை என்று ஆணை பிறப்பித்து இருப்பது மோசடியாகும். இது தமிழுக்கும் தமிழர்களின் கல்வி உரிமைக்கும் செய்யும் பச்சை துரோகம், படுபாதகச் செயல்.

மோடி அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பிற்கு மட்டுமே அக்கறை காட்டுகிறது. மத்திய அரசால் தமிழ்நாட்டில் நடத்தப்படுகிற பள்ளிக்கு இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை நடத்த ஆசிரியர்களுக்குத் தமிழக அரசுதான் ஊதியம் வழங்குகிறது. இந்நிலையில் தமிழ் ஆசிரியர்களை நியமித்துக் கற்பிக்க மறுப்பது என்பது மிகப்பெரிய கயமைத்தனம்.

தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமித்து தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT