அதிமுக முன்னாள் எம்பியும், அக்கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளருமான விஜிலா சத்தியானந்த் நேற்று திமுகவில் இணைந்தார்.
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயரும், முன்னாள் எம்பியுமான விஜிலா சத்தியானந்த், அமமுகவைச் சேர்ந்த நெல்லை மாநகராட்சி மேலபாளையம் மண்டல முன்னாள் தலைவர் எஸ்.கே.ஏ. ஹைதர்அலி. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராம்சன் உமா ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
திமுகவில் இணைந்த விஜிலா சத்தியானந்த் உள்ளிட்டோரை வரவேற்ற திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கட்சி உறுப்பினர் அட்டையை வழங்கினார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய விஜிலா, “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. திராவிடக் கொள்கைகளில் உறுதியாக இருப்பவர்கள், தமிழக நலனில் அக்கறை கொண்டவர்கள் செல்ல வேண்டிய இடம் கமலாலயம் (தமிழக பாஜக தலைமை அலுவலகம்) அல்ல. அறிவாலயம்தான். அதனால்தான் திமுகவில் இணைந்தேன்" என்றார்.
அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளர் மு.அப்துல்வஹாப் ஆகியோர் உடனிருந்தனர்.