விழுப்புரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 12 பேர் அறுவை சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்றாளர்களுக்கு ஏற்படும் பின்விளைவாக கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டு 15 பேர் கடந்த சில நாட்களில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 12 பேருக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் குந்தவை தேவி தலைமையில் துறைத் தலைவர்கள் காது, மூக்கு,தொண்டை பிரிவு செளந்தரராஜன், கண் மருத்துவ பிரிவு சுமதி, பொது மருத்துவ பிரிவு சுப்ரமணியன், மயக்கவியல் பிரிவு அருண்சுந்தர், உயிர் நுண்ணுயிரியல் துறைமீனாட்சி, மருத்துவ கண் காணிப்பாளர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ., சாந்தி கண்காணிப்பு குழு தலைவர் டாக்டர் தரணிவேல் உள்ளிட்டோர் அறுவை சிகிச்சை செய்தனர். அதன் பிறகு 12 பேருக்கும் மருந்து வழங்கப்பட்டு குணமாகி வருகின்றனர்.
இவர்களில் கூலித் தொழிலாளிகள் ஆயந்தூரைச் சேர்ந்த மணி(58), கண்டாச்சிபுரத்தை சேர்ந்த கலியமூர்த்தி (48) ஆகியோருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் குந்தவை தேவி கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் 45 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி கண்டறியப்பட்டு, அதில் 15 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் சென்னை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். 12 பேருக்குஇங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்து வழங்கப்பட்டு, குணமடைந்து வருகின்றனர். 2 பேர்பூரண குணமடைந்து வீடு திரும்பினர் என்று தெரிவித்தார்.