முந்தைய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி அவற்றை விரைவுபடுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில், ''இந்த நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், தமிழகத்துக்கு தேவையான முக்கிய திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்பதால் சில யோசனைகளை முன்வைக்கிறேன். இவை தமிழகத்துக்கு சாதகமான முறையில் பரிசீலிக்கப்படும் என நம்புகிறேன்.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட தொலைநோக்குத் திட்டம் 2023-ல், தமிழகத்துக்கான 10 முக்கிய திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. சென்னை - கன்னியாகுமரி இரட்டை வழித்தடம், ஸ்ரீபெரும்புதூர் - கிண்டி சரக்கு வழிப் பாதை, சென்னை - தூத்துக்குடி சரக்கு வழித்தடம், சென்னை - மதுரை –கன்னியாகுமரி, மதுரை - கோவை மற்றும் கோவை - சென்னை அதிவேக பயணிகள் ரயில் பாதை இணைப்பு, சென்னை - பெங்களூர் அதிவேக ரயில் பாதை இணைப்பு, சென்னை - பெங்களூர் சரக்கு வழிப் பாதை, ஆவடி - கூடுவாஞ்சேரி ரயில் இணைப்பு, ஆவடி – திருவள்ளூர் - எண்ணூர் துறைமுகம் இணைப்பு ஆகிய திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த 10 திட்டங்களும் ரயில் போக்குவரத்தின் மேம்பாட்டுக்கும் தமிழகத்தின் உள்கட்டமைப்பு திட்டங்களின் வளர்ச்சிக்கும் தேவையானது.
மதுரை, தூத்துக்குடி இடையிலான தொழில் வழித்தடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, சிறப்பு திட்ட செயலாக்க அமைப்பை உருவாக்க ரயில்வே அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள தமிழக அரசு கொள்கை அளவில் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பை ஏற்படுத்துவதற்காக ரயில்வே அமைச்சகம் அளித்த வரைவு ஒப்பந்தத்தில் தமிழகத்தின் கருத்துக்கள் இடம் பெறவில்லை. தமிழகம் இந்த ஒப்பந்தத்தை ஏற்க வேண்டுமானால், திருத்தங்களை செய்ய வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தமானது நியாயமாக, நடுநிலையாக, ஏற்கும் வகையில் இருக்க தேவையான கலந்தாய்வுகளை நடத்த ரயில்வே அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.
மேலும், கடந்த ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்துக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்காததால் இதுவரை அவை தொடங்கப்படவில்லை. எனவே, இத்திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் போதிய நிதியை ஒதுக்கி அவற்றை விரைவுபடுத்த வேண்டும். ரயில்வே பட்ஜெட்டில் தமிழக பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என நம்புகிறேன்'' என ஜெயலலிதா கூறியுள்ளார்.