தமிழகம்

தமிழ்வழிக் கல்விச் சலுகையில் குளறுபடி குரூப் 1 முதல் நிலை தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக்கோரி வழக்கு: டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு

கி.மகாராஜன்

அரசுப் பணி நியமனத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு சலுகையை அமல்படுத்தியதில் குளறுபடி நடந்துள்ளதால் குரூப் 1 முதல் நிலை தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி தாக்கலான மனுவுக்கு டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த மகேந்திரன், கோவிந்தசாமி, அருண், பாலு உள்பட 6 பேர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சியால் கடந்தாண்டு ஜனவரி 20-ல் வெளியிடப்பட்டது. குரூப் 1 முதல் நிலை தேர்வு இந்தாண்டு ஜன. 3-ல் நடைபெற்றது.

முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் பிப். 9-ல் வெளியானது. இப்பட்டியல் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத ஒதுக்கீட்டு சலுகை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணி நியமனத்தில் தமிழ் வழிக்கல்விக்கான 20 சதவீத ஒதுக்கீட்டு சலுகை ஒன்று முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றால் பட்டப்படிப்பை மட்டும் தமிழில் பயின்றவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பிப். 9-ல் வெளியிடப்பட்ட குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவை ரத்து செய்து, உயர் நீதிமன்ற உத்தரவு படி ஒன்று முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டும் 20 சதவீத ஒதுக்கீட்டு சலுகை வழங்கி புதிதாக தேர்வு பட்டியல் தயாரித்து வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது.

மனு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 12-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT