தமிழகம்

திமுகவில் இணைந்தது ஏன்? 11,000 பேர் மநீமவைத் துறந்ததன் காரணம் என்ன?- மகேந்திரன் பேட்டி

செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்து பதவி விலகிய மகேந்திரன், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தொண்டர்களுடன் அக்கட்சியில் இணைந்தார். அத்துடன் 11 ஆயிரம் தொண்டர்கள் கொண்ட பட்டியலையும் அளித்தார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியதிலிருந்து அவருடன் பயணித்தவர் மகேந்திரன். மருத்துவரான மகேந்திரன் தனி அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார். பின்னர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். கட்சியின் ஆரம்பக்காலத் தலைவர்களில் ஒருவராக, துணைத் தலைவராக கமலுடன் இணைந்து பயணித்தார்.

கமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில், இன்று மாலை 5 மணி அளவில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைந்தபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மகேந்திரன் "நான் திமுக தொண்டனாக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளேன். என்னுடன் 78 நிர்வாகிகளும், 11000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் இன்று திமுகவில் இணைந்துள்ளோம். நான் யாரையும் வலுக்கட்டாயமாக திமுகவுக்கு அழைத்துவரவில்லை. அவர்களாகவே விரும்பி வந்து சுயமரியாதை இயக்கத்தில் இணைந்துள்ளனர்.

எங்கு தலைமை சரியாக உள்ளதோ அங்குதானே தொண்டர்கள் இணைவார்கள். நான் அரசியலுக்கு வந்தபோது செயல்பாடு அடிப்படையில் ஒரு தலைவரைத் தேர்வு செய்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்தேன். ஆனால், அந்த நம்பிக்கை நிறைவேறவில்லை.

ஆனால், பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக கடந்த 2 மாதங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவே நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த செயல்பாடு.

கரோனா பெருந்தொற்று இல்லையென்றால் அனைவரும் இணையும் நிகழ்ச்சியை கோவையில் பெரிய அளவில் நடத்தியிருப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT