நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அட்டாக்பாண்டிக்கு பரோல் விடுமுறை கேட்டு தாக்கலான மனுவுக்கு மதுரை சிறைத்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர் அட்டாக்பாண்டி. இவரை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுக்கு மேலாக சிறையில் உள்ளார். தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் உத்தங்குடியில் உள்ள நாளிதழ் அலுவலகத்தில் கடந்த 2007-ல் நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அட்டாக்பாண்டிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து 21.3.2019-ல் உத்தரவிட்டது.
இந்நிலையில் அட்டாக்பாண்டியை பத்து நாள் பரோலில் விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி தயாள், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், அட்டாக்பாண்டியின் தாயார் சுய நினைவில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாயாரை பார்ப்பதற்காக அட்டாக்பாண்டிக்கு பரோல் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அட்டாக்பாண்டிக்கு பரோல் கேட்டு அளித்த மனுவை சிறைத்துறை கண்காணிப்பாளர் நிராகரித்து உத்தரவிட்டதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், சிறைத்துறை கண்காணிப்பாளர் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய உரிமை வழங்கி உத்தரவிட்டனர்.
இதையடுத்து அட்டாக்பாண்டியை பரோலில் விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி தயாள், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், அட்டாக்பாண்டியின் தாயார் ராமுத்தாய் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உள்ளார். தாயாரை நேரில் வந்து பார்ப்பதற்காக கணவரை பரோலில் விடுவிக்கக்கோரி சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தோம்.
கணவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறி பரோல் வழங்க சிறை கண்காணிப்பாளர் மறுத்துவிட்டார். நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்து என் கணவரை பத்து நாள் பரோலில் விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், பி.புகழேந்தி, அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 26-க்கு ஒத்திவைத்தனர்.