பாடப் புத்தகங்களிலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையைக் கொண்டுவந்து மாணவர்கள் மத்தியில் பரவலாக அவர்கள் ஏற்றுக்கொள்ள விரைவில் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று நியமிக்கப்பட்டார். தொண்டாமுத்தூரில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது லியோனி பெண்கள் குறித்துப் பேசியது சர்ச்சையான நிலையில், பாடநூல் கழகத்தின் தலைவராக அவர் நியமனம் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து திண்டுக்கல் ஐ.லியோனி இன்று தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ''இது எல்லோரும் வைக்கக்கூடிய விமர்சனம்தான். இத்தகைய விமர்சனங்களை நான் பொருட்படுத்தவில்லை. ஏனெனில், பெண்களே அதுகுறித்த பெரிய போராட்டத்தையோ, பெரிய அளவிலான எதிர்ப்பையோ இதுவரை பதிவு செய்யவில்லை.
பாஜகவும், பாமகவும்தான் இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறின. அதிமுக கூட அத்தகைய குற்றச்சாட்டை வழிமொழிந்து பேசவில்லை. பிரதமரிடம் எழுதிக் கொடுத்ததால் பிரச்சாரத்தில், அவர் அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தினார். பாஜகவும், பாமகவும்தான் அவற்றைப் பெரிய விஷயமாக மக்களிடம் எடுத்துச் சென்றன. ஆனால் அந்தக் குற்றச்சாட்டு மக்களிடம் எடுபடவில்லை. எனவே அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை.
எப்படி சென்னை மாகாணம் என்னும் பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டு, தமிழ்நாடு என்னும் பெயர் நிலைநிறுத்தப்பட்டதோ அந்த வகையில் மக்கள் புழங்கும் பல வார்த்தைகள் உலக நடைமுறைக்கு வந்துவிட்டன. அதில் முக்கியமான ஒரு வார்த்தை மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்று மாற்றுவது. இதை ஒன்றிய அரசு என்று அனைத்துப் பாடப் புத்தகங்களிலும் மாற்றுவோம்.
ஒன்றிய அரசு என்பது அழகான சொல். மத்தியம் என்பது மத்தியில் இருப்பது என்று பொருள்படும். ஒன்றியம் என்பது பல மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து இருப்பது. எனவே, மத்திய அரசு என்பதைவிட ஒன்றிய அரசு என்பதே மிகவும் பொருத்தமான சொல். எனவே பாடத்திட்டங்களில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையைக் கொண்டுவந்து மாணவர்கள் மத்தியில் பரவலாக அவர்கள் ஏற்றுக்கொள்ள விரைவில் முயற்சி மேற்கொள்ளப்படும்’’ என்று திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார்.