தமிழகம்

தமிழக பாஜக தலைவராக தொடர்வேனா?- எல்.முருகன் பேட்டி

செய்திப்பிரிவு

தமிழக மீனவர் நலனைப் பாதுகாப்பேன் எனத் தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கச்சத்தீவைத் தாரை வார்த்தது திமுகதான் என்று பேட்டி அளித்தார்.

மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு எல்.முருகன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது கூறியதாவது:

''தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் வழங்கி இருக்கிறார்கள். தமிழகத்தில் மிகப்பெரிய துறையாக இருப்பது மீன்வளம், அந்தப் பொறுப்பில் நான் மத்தியில் அமர்ந்துள்ளேன். இந்தப் பொறுப்பின் மூலம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாகச் செயல்படுவேன்.

மேலும், மீன்வளத்தைப் பெருக்கவும், மீனவர் நலனைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பேன். ஆழ்கடல் மீன்பிடிப்பு, மீனவர் நலன் அவர்களுக்கான மானியம் உள்ளிட்ட அனைத்து நலன்களையும் காப்பேன்.

மேலும், 2016ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட இப்போது தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறைந்துள்ளது. கச்சத்தீவைத் தாரைவார்த்துக் கொடுத்தது திமுகதான். மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நான் தமிழக பாரதிய ஜனதா தலைவராகத் தொடர்வேனா? என்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு செய்யும்”.

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT