அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதி (67) நேற்று காலமானார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் கடந்த 1980-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் எம்.விஜயசாரதி. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்தார். தொடர்ந்து. 1984-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதையடுத்து, அதிமுகவில் தொடர்ந்தாலும் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தார். 67 வயதான அவர் உடல்நலக் குறைவால் நேற்று காலை மரணமடைந்தார்.
இதையடுத்து, அரக்கோணத்தில் உள்ள சகோதரரான மருத்துவர் விஜயராகவன் வீட்டில் முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டது. அரக்கோணத்தில் இன்று காலை 11 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதியின் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.