தன்னுடைய பெயரில் போலிச் செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் தங்கர் பச்சான் காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. இதை திரும்பப் பெற வேண்டும் என திரைத்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு அண்மையில் கடிதம் எழுதினார்.
வைரலான செய்தி
இந்நிலையில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததுபோன்று சமூக வலைதளங்களில் செய்தி வைரலானது.
இந்நிலையில், தங்கர் பச்சான் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, சமூக ஊடகங்களில் நான் வெளியிடாத கருத்துகளை சிலர் என் பெயரில், எனது புகைப்படத்துடன் உருவாக்கி பரப்புகின்றனர். இதன்மூலம் எனது பொது வாழ்விலும், திரைப்படத் துறையிலும் எனக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
இது தொடர்பாக நான் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளேன். இதன் பின்னரும், எனது பெயரில் பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன. எனவே இதுபோன்ற தகவல்களை பரப்பும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மனுவை காவல் ஆணையர் சார்பில் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் எஸ்.விமலா பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிலையில் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவை நான் ஆதரிப்பதாக பரவும் தகவலில் உண்மை இல்லை என தங்கர் பச்சான் தெரிவித்தார்.