பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமையவுள்ள பகுதியில் மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். உடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கருணாகரன், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர். 
தமிழகம்

பழவேற்காடு ஏரி முகத்துவாரப் பகுதியில் அமைச்சர் ஆய்வு

செய்திப்பிரிவு

பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமையவிருக்கும் பகுதியில் மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பழவேற்காட்டில் ஏரியும், கடலும் சேரும் முகத்துவார பகுதியில் பருவகால மாற்றத்தாலும், கடல் அலை சீற்றத்தாலும் அடிக்கடி மணல் திட்டுகள் உருவாகி, அடைப்பு ஏற்படுகிறது. இதனால், பழவேற்காடு மற்றும் அதை ஒட்டியுள்ள 54 மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்கள் கடலில் சென்று மீன்பிடிக்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.

ஆகவே, பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க தமிழக அரசு ஏற்கெனவே அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமையவிருக்கும் பகுதியில் நேற்று மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதுமட்டுமல்லாமல், அவர் மீனவ மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:

பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணிக்காக, ரூ.26.85 கோடி செலவில் அலை தடுப்பு நேர்கல் சுவர்கள் அமைத்தல், முகத்துவாரத்தை தூர்வாருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஏற்கெனவே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்பணிகளை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை எதிர்நோக்கி உள்ளோம்.

இந்நிலையில், தற்போது பழவேற்காடு முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளை உடனடியாக அகற்றி, எளிதாக மீன் பிடி படகுகள் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதுமட்டுமல்லாமல் இங்கு மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாய்வின் போது, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கருணாகரன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகர், டி.ஜெ.கோவிந்தராஜன், ஜெ.ஜெ.எபினேசர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT